ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், இன்று இச்சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 23ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் தடைச் சட்டத்தின் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே அனுப்பபட்ட சட்டமுன்வடிவு ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டது. ஆளுநர் திருப்பி அனுப்பிய கடிதத்தில் இடம்பெற்றிருந்த விவரங்களை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். இதனையடுத்து ஆளுநர் திருப்பி அனுப்பிய கடிதம் அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது.
”இதயமுள்ளவர்கள் யாருக்கும் இந்த சட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவிக்க முடியாது. சட்ட ஒழுங்கை பேணுவதும்,மக்களை பாதுகாப்பதும், மாநில அரசாங்கத்தின் மிக முக்கியமான கடமை. மாநில எல்லைக்குள்ள மக்கள் அனைவரையும் காக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார்.
இதையும் படியுங்கள் : திருப்பதி ஏழுமலையானுக்கு 250 ஏக்கர் விவசாய நிலத்தை தானமாக வழங்கிய பக்தர்!
இந்த சட்ட முன்முடிவை தமிழ்நாட்டில் உள்ள பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் மற்றும் திமுகவின் கூட்டனி கட்சிகள் ஏகமனதாக ஆதரவு தெரிவித்ததையடுத்து, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா நிறைவேறியதாக சபநாயாகர் அப்பாவு அறிவித்தார்.
இரண்டாவது முறையாக சட்டபேரவையில் தாக்கல் செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து ஆன்லைன் தடைச் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். இரண்டாம் முறை சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் ஆளுநர் ஒப்புதல் அளித்தே தீர வேண்டும் என்பது விதியாகும்.
சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்ட நிலையில் ஆளுநர் இந்த ஒப்புதலை அளித்தார். தொடர்ந்து, நேற்றே அரசிதழில் இந்த சட்டமானது வெளியிடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அதன்படி அரசிதழில், ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் இன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக ஆணையம் அமைக்கப்படும் என்றும், இதற்கு தலைமைச் செயலாளர் பதவிக்கு குறையாத பதவியை வகித்து ஓய்வு பெற்றவர் ஆணையத் தலைவராக நியமிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஐ.ஜி. மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள் ஆணையத்தின் உறுப்பினர்களாக இருப்பர் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆன்லைன் விளையாட்டில் நிபுணத்துவம் பெற்ற ஒருவரும் விளையாட்டு ஆணையத்தின் உறுப்பினராக பணியமர்த்தப்பட உள்ளார். ஆன்லைன் சூதாட்டங்களை நடத்தும் நிறுவனங்களையும், அவர்களைப் பற்றிய தரவுகளையும் இந்த ஆணையம் கண்காணித்து, பராமரிக்கும். ஆன்லைன் சூதாட்டம் குறித்து அளிக்கப்படும் புகார்களை ஆணையம் விசாரிக்கும் என்றும் அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









