புலம்பெயர் தொழிலாளர்களும் தேர்தலில் வாக்களிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதில், பெரும் சவாலை ஏற்படுத்துவது புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிப்பதுதான். கல்வி, தொழில் உள்ளிட்ட பணிகளுக்காக ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குச் செல்கின்றனர். இவர்கள் தேர்தலில் வாக்களிக்க நினைத்தாலும், தாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து தங்களது சொந்த ஊரில் உள்ள வாக்குப் பதிவு மையங்களுக்கு வந்து வாக்களிப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. எனவே, பைலட் முறையில் தொலைதூரத்தில் இருந்தே வாக்களிப்பதற்கான சாத்தியங்கள் குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இப்பிரச்னையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் மக்கள் தொகை குறித்து கண்டறியும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. மேலும், ஐஐடி மெட்ராஸ் உடன் இணைந்து தொலைதூரத்தில் இருந்து வாக்களிப்பதற்கான பிளாக் செயின் எனும் தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.
சமீபத்தில் 5 மாநில தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், புலம்பெயர் வாக்காளர்கள் வாக்களிப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து தேர்தல் ஆணையம் மீண்டும் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் உத்திரகாண்ட், சாமோலிமாவட்டத்தில் உள்ள புறநகர்ப் பகுதிகளில் உள்ள வாக்குப் பதிவு மையங்களைப் பார்வையிடுவதற்காக 18 கி.மீ. தூரம் பயணித்தார். அங்குள்ள அரசியல் கட்சியினரிடமும், கிராம மக்களிடமும் புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிப்பதற்கான பிரச்னைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
புலம்பெயர் தொழிலாளர்கள் தேர்தலில் வாக்களிப்பதில் உள்ள பிரச்னைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள குழு அமைத்துள்ளதாகவும், அரசியல் கட்சிகளிடம் இதுகுறித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிப்பது தொடர்பான கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உத்திரகாண்ட், சாமோலி மாவட்டத்தில் உள்ள தூமக் கிராமத்தில் 71.14 சதவீத வாக்காளர்களும், கல்கோத் கிராமத்தில் 80.45 சதவீத வாக்களர்களும் வாக்களிக்கத் தகுதியானவர்களாக இருந்தனர். இந்த கிராமத்தில் உள்ள 20 முதல் 25 சதவீத வாக்காளர்கள் தங்களுடைய கிராமத்தில் இருந்து பணி, தொழில், கல்வி நிமித்தமாக மற்ற பகுதிகளுக்கு புலம்பெயர்ந்து சென்றவர்களாவர். இதனால், அவர்களால் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அந்தப் பகுதிகளில் வாக்குப் பதிவுகளை நடத்துவதில் தேர்தல் அதிகாரிகளுக்கு பல்வேறு சவால்களைச் சந்தித்தனர்.
இப்பகுதிகளில் தேர்தல் பணி மேற்கொள்வதற்காக அதிகாரிகள் இரண்டு நாள்களுக்கு முன்னரே செல்ல வேண்டியுள்ளது. மேலும், செல்லும் வழித்தடங்களிலும் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. எனவே, அதிகாரிகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து ஆவணப்படுத்த வேண்டும் என கூட்டத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தொலைதூரத்தில் இருந்தே வாக்களார்கள் வாக்களிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பிரச்னை தொலைதூரத்தில் இருந்தே வாக்களிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 பொதுத் தேர்தலின்போது சில நகர்ப்புறத் தொகுதிகளில் 50%க்கும் குறைவான வாக்குகள் பதிவாகியிருந்ததாக தேர்தல் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. “நகர்ப்புறங்களில் வாக்காளர்களுக்கு 2 கிலோமீட்டர் தொலைவில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்ட போதிலும், சில பெருநகர மற்றும் நகரப் பகுதிகளில் மிகக் குறைவான வாக்குப் பதிவுகளே பதிவாகி இருப்பதை ஆணையம் குறிப்பிட்டுள்ளது. நகர்ப்புறங்களில் வாக்களிக்கும் அக்கறையின்மைக்கு தீர்வு காண வேண்டிய அவசியம் உணரப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
-ம.பவித்ரா








