சாலை அமைப்பதில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தேசிய நெடுஞ்சாலை 53ல், 105 மணி நேரம் 33 நிமிடங்களில் 75 கிலோ மீட்டர் சாலை அமைக்கப்பட்டு, அது கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நாடு சுதந்திரம் அடைந்ததன் 75ம் ஆண்டு அம்ருத மகோத்சவ கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மகாராஷ்ட்ராவின் அமராவதியில் இருந்து அகோலா மாவட்டம் வரை 75 கிலோ மீட்டர் தொலைவுக்கான சாலை அமைக்கும் பணி, கடந்த 3ம் தேதி காலை 7.27 மணிக்குத் தொடங்கி நேற்று மாலை 5 மணிக்கு முடிவடைந்ததாகத் தெரிவித்துள்ள நிதின் கட்கரி, இதன் மூலம் சாலை அமைப்பதில் புதிய கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக இரவு பகலாகப் பாடுபட்ட அனைவருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பாக, கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் 10 நாட்களில் 25.275 கிலோ மீட்டர் அமைக்கப்பட்டதே உலக சாதனையாக இருந்தது. இந்த சாதனை 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் படைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த சாதனையை இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது.