சிவகார்த்திகேயன் அமரன் படத்தை தயாரிப்பதற்கு தேர்வு செய்தது ஏன்? என்று படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள 21வது திரைப்படம் ‘அமரன்’. இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இதனை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக சாய்பல்லவி நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் “மேஜர் முகுந்த் வரதராஜன்” என்ற ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.
காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் மோதலை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இத்திரைப்படம் அக்டோபர் 31-ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. தீபாவளி வெளியீடாக திரைக்கு வருவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் ‘அமரன்’ படக்குழு கிளிம்ப்ஸ் வீடியோவை பகிர்ந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்த படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கமல்ஹாசனிடம் அமரன் படத்தை ஏன் தேர்வு செய்தீர்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, குருதிப்புனல் படம் எல்லாம் புனை கதைகள். இது அது அல்ல. இந்த கதை ஏன் இப்படி போச்சு என்று கேட்கவே முடியாது. இந்த வீரருக்கு (மேஜர் முகுந்த்) நிகரான வீரம் வீட்டிலும் இருக்க வேண்டும். அவரைப் பற்றிய கதையும் இது. இது நிஜம், இது நமக்காக நிகழ்ந்த நிஜம். இந்த கதையை நாங்கள் தேர்வு செய்தோம் என்று கூற முடியாது. இது நிகழ்ந்து விட்டது. நாங்கள் இதை கண்டெடுத்ததில் பெருமை கொள்கிறோம். இதில் எங்களுக்கு பங்கு என்னவென்றால் கடமையைச் செய்துள்ளோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.







