தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பார்த்தார்.
1990ஆம் ஆண்டு காஷ்மீரில் இந்து மதத்தினரை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தபப்ட்டது. லட்சக்கணக்கான இந்து பண்டிட்கள் காஷ்மீரை விட்டு வெளியேறி அண்டை மாநிலங்களில் அகதிகலாக தஞ்சமடைந்தனர். இந்த உண்மைச்சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’.
பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில், பிரபல பாலிவுட் நடிகர்களான அனுபம் கெர், மிதுன் சக்ரவர்த்தி, பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் மார்ச் 11ம் தேதி அன்று வெளியானது. இப்படத்தில் இந்துக்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுவதால், இது இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் என்ற தோற்றத்தையும் உருவாக்கி இருக்கிறது.
மேலும், இந்த படத்தை அரசியல் பிரமுகர்களும், திரைப்பிரபலங்களும் ஆதரித்து வருகின்றனர். மேலும் இந்த திரைப்படத்தை ஆதரிக்கும் விதமாக அரியானா மாநில அரசு இப்படத்திற்கு முழுமையான வரிச்சலுகையை வழங்கியுள்ளது. மேலும் மத்திய பிரதேசத்தில் காவல் துறையினருக்கு இந்த திரைப்படத்தை பார்க்க ஒரு நாள் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை கோயம்பேடு ரோகினி திரையரங்கில் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பொதுச் செயலாளர் கரு நாகராஜன், துணைத்தலைவர் வி.பி.துரைசாமி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பார்த்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வி.பி.துரைசாமி, தமிழ்நாட்டில் உள்ள எட்டு கோடி மக்களும் இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். படத்தைப் பார்த்தவுடன் தமக்கு தேசப்பற்று இன்னும் அதிகரித்தாகவும், ஒவ்வொரு திமுக தொண்டனும் இந்த படத்தை பார்த்தால் ஒரு புதிய பாடத்தை கற்றுக்கொள்வார்கள் எனவும் குறிப்பிட்டார்.







