மதுபோதையில் கூகுள் நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; ஹைதராபாத்தை சேர்ந்தவர் கைது

புனேவில் கூகுள் நிறுவன அலுவலக வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக அழைப்பு வந்ததையடுத்து, அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அது போலி மிரட்டல் என்பதைக் கண்டறிந்து, மிரட்டல் விடுத்தவரைக் கைது செய்துள்ளனர். மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா…

புனேவில் கூகுள் நிறுவன அலுவலக வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக அழைப்பு வந்ததையடுத்து, அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அது போலி மிரட்டல் என்பதைக் கண்டறிந்து, மிரட்டல் விடுத்தவரைக் கைது செய்துள்ளனர்.

மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா வளாகத்தில் அமைந்துள்ள கூகுள் அலுவலகத்திற்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.54 மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. முந்த்வா பகுதியில் உள்ள பல மாடி வர்த்தக கட்டடத்தின் 11வது மாடியில் அமைந்துள்ள கூகுள் நிறுவன அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என தொலைபேசியில் பேசியவர் கூறியுள்ளார்.

இதையடுத்து, கூகுள் நிறுவன அதிகாரிகள் காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவுகள் 505(1)(B) ( பொதுமக்களுக்கு அச்சம் அல்லது எச்சரிக்கையை விடுதல்) மற்றும் 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, புனே காவல்துறை மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை மேற்கொண்டனர். பல மணி நேர சோதனைக்குப் பின் அபாயகரமான எந்த பொருளும் அங்கு கண்டுபிடிக்கப்படவில்லை. அத்துடன் தொலைபேசி எண்ணை வைத்து ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்டவர் மதுபோதையில் கூகுள் நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார் எனத் தெரிய வந்துள்ளது. மதுபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விட்ட நபரால் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் மத்தியில் சில மணி நேரம் பதற்றம் நிலவியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.