28.3 C
Chennai
September 30, 2023
முக்கியச் செய்திகள் குற்றம்

24 மணி நேரத்தில் 2 கொலைகள்: கோவையில் அதிர்ச்சிச் சம்பவங்கள்!

கோவையில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு கொலைகள் அரங்கேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் பின்புறம் பல்வேறு கடைகள், வழக்கறிஞர்களின் அலுவலகங்கள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இன்று திங்கள்கிழமை என்பதால் நீதிமன்ற வளாகம் பரபரப்பாகக் காணப்பட்டது. இந்நிலையில், அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென்று இரண்டு இளைஞர்களை அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு இளைஞருக்கு தலை மற்றும் கைகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மற்றும் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். போலீஸாரும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.

உயிரிழந்தவர் கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த கோகுல் (25) என்பதும், காயமடைந்தவர் சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த மனோஜ் (27) என்பதும் தெரியவந்துள்ளது. இருவரும் நீதிமன்ற விசாரணைக்காக அங்கு வந்ததாகக் கூறப்படுகிறது. உயிரிழந்த கோகுல் தன் உடலில் ஒரு கத்தியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது. பட்டப் பகலில், மக்கள் முன்னிலையில் இரண்டு இளைஞர்களைத் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து 5 தனிப்படை போலீஸ் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேபோல, மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்தி என்கிற சத்தியபாண்டி (31). இவர் கோவை விளாங்குறிச்சியில் தங்கி ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று மாலை நவஇந்தியா – பாப்பநாயக்கன்பாளையம் சாலையில் உள்ள ஓர் கடையில் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் சக்தியை சுற்றி வளைத்துள்ளது. அவர்களிடம் இருந்து சக்தி தப்பி ஓடியுள்ளார். கடுமையான ஆயுதங்களுடன் அந்த கும்பல் சக்தியை துரத்தியுள்ளது. ஒருகட்டத்தில் அந்த கும்பல் சக்தியை பிடித்து பொதுமக்கள் மக்கள் முன்னிலையிலேயே சரமாரியாக வெட்டியுள்ளனர். பிறகு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

தகவலறிந்து வந்த போலீஸார் சக்தியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலில் 15 வெட்டுக் காயங்கள் இருந்துள்ளன. அங்கிருந்த மக்கள் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதாகவும் போலீஸிடம் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2020ம் ஆண்டு கோவை ராம்நகர் பகுதியில் இந்து முன்னணியைச் சேர்ந்த பிஜூ என்பவர் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேர்களில் சக்தியும் ஒருவர். சிறையில் இருந்து ஜாமீனில் வந்தவரை, அந்த சம்பவத்துக்கு பழித் தீர்க்கும் விதமாக இந்த கொலைச் சம்பவம் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram