துருக்கி நிலநடுக்கத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட காஹ்ராமன் நகரம் அருகே நேற்று நள்ளிரவில் மீண்டும் மற்றொரு நிலநடுக்கம் உணரப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியை உள்ளது.
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஷியான்டெப் நகரில் கடந்த 6ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கமானது 18 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் மையம் தெரிவித்துள்ளது. அதைதொடர்ந்து 7.5 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதையும் படிக்கவும்: மதுரை சித்திரை திருவிழா ஏப்.23 கொடியேற்றத்துடன் தொடக்கம்
இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 34,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது. பலி எண்ணிக்கை 50,000 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், துருக்கியின் காஹ்ராமன்மராஸ் நகரில் இருந்து தென்கிழக்கே 24 கி.மீ. தொலைவில் நேற்று நள்ளிரவு 12.03 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. அது ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகி இருந்தது. நிலநடுக்கம் 15.7 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது.
இந்நகரம் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் அதிகம் பாதித்த பகுதியாக உள்ளது. ஒரு வாரம் கழிந்த நிலையில், மீண்டும் அதே நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால், அந்த பகுதி மக்கள், மீட்பு மற்றும் நிவாரண பணியில் ஈடுபட்டோர் அதிர்ச்சி அடைந்தனர். துருக்கியில் கடந்த வாரம் அடுத்தடுத்து ஏற்பட்ட இரு நிலநடுக்கங்களின் பாதிப்பு அதிக வேதனையை ஏற்படுத்தி உள்ளது.








