ரூ.1.15 கோடி மதிப்புடைய போதைப்பொருட்கள் பறிமுதல்

கோவை ரயில் நிலையத்தில் ரூ.1.15 கோடி மதிப்பிலான போதைப்பொருளை கடத்திய நைஜீரிய நாட்டு இளைஞர் கைது செய்யப்பட்டார். கோவை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெளிநாட்டிலிருந்து வந்து தங்கி பலர் வேலை செய்து வருகின்றனர்.…

கோவை ரயில் நிலையத்தில் ரூ.1.15 கோடி மதிப்பிலான போதைப்பொருளை கடத்திய நைஜீரிய நாட்டு இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கோவை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெளிநாட்டிலிருந்து வந்து தங்கி பலர் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் சிலர், கோவை, திருப்பூரில் ஜவுளி ஏற்றுமதி என்ற போர்வையில் போதைப்பொருள்களை கடத்தி வரும் செயலில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் டெல்லியில் இருந்து கோவை வழியாக திருவனந்தபுரம் செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக மதுரை துணை மண்டல மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கோவை ரயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் சந்தேகத்துக்கு இடமான வகையில் உடைமைகளுடன் சென்ற வெளிநாட்டு இளைஞர் ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் 8 கார்பன் பொட்டலங்களில் பொட்டலங்களில் ரூ.1.15 கோடி மதிப்பிலான 2.235 கிலோ ஆம்பெட்டமைன் என்ற போதைப்பொருளை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அவரை கைது செய்த மதுரை துணை மண்டல மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவரிடம் இருந்து போதை பொருளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் அதிகாரிகள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அவர் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த எட்வின் கிங்ஸ்லி என்பதும், திருப்பூரில் தங்கியிருந்து கார்மெண்ட் பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மற்றும் கோவை ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.