தடை செய்யப்பட்ட போதைப் பொருளைப் பயன்படுத்தியதாக பிரபல பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் மகன் சித்தாந்த் கபூர் உள்பட 6 பேரை பெங்களூர் போலீஸார் கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
பெங்களூரில் திறந்த வெளியில் நடைபெற்ற இசை-நடன நிகழ்ச்சியில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது 6 பேர் தடை செய்யப்பட்ட போதைப் பொருளை பயன்படுத்தியதாக கைது செய்தோம். அவர்களில் ஒருவர் சித்தாந்த் கபூர் ஆவார். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலீஸார் தெரிவித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
37 வயதான சித்தாந்த் கபூரும் நடிகர் தான். ஷூட்அவுட் அட் வதாலா, ஹசீனா பார்கர், ஜாஸ்பா ஆகிய படங்களிலும் பெளகால் என்ற இணையத் தொடரிலும் நடித்திருக்கிறார்.
அவரிடம் இரத்த மாதிரி எடுக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. சோதனை முடிவில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று காவல் துறை துணை ஆணையர் பீமாசங்கர் எஸ் குலேட் தெரிவித்தார்.

முன்னதாக, 2020ம் ஆண்டு கன்னட திரையுலகில் போதைப் பொருள் பயன்பாடு இருப்பதை போலீஸார் வெளிக் கொண்டுவந்தனர். பிரபல நடிகைகள் ராகினி திவிவேதி, சஞ்சனா கல்ரானி, முன்னாள் அமைச்சரும் காலமான ஜீவராஜ் ஆல்வாவின் மகன் ஆதித்ய ஆல்வாவும் கைது செய்யப்பட்டனர்.
இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலையைத் தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட போதைப் பொருள் வழக்கில், சித்தாந்த் கபூரின் சகோதரியும் நடிகையுமான ஷரத்தா கபூரிடம் போதைப் பொருள் தடுப்பு அமைப்பு விசாரணை நடத்தியது.
நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், சாரா அலி கான், தீபிகா படுகோன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. எனினும், சுஷாந்த் ராஜ்புத்தின் தோழியான ரியா சக்ரவர்த்தி கைது செய்யப்பட்டார். அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
-மணிகண்டன்