“உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி போல் செயல்பட்டது கண்டனத்துக்குரியது” என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி குற்றம்சாட்டினார்.
நபிகள் நாயகம் குறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா சர்ச்சை கருத்து தெரிவித்ததற்கு முஸ்லிம் நாடுகள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்திருந்தது.
இதையடுத்து, அவரை பொறுப்பிலிருந்து பாஜக மேலிடம் நீக்கியது. எனினும், அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
அப்போது திடீரென வன்முறை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, போலீஸாருக்கும், வன்முறையாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. வன்முறை தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டோரை அந்த மாநில காவல் துறை கைது செய்தது.
இதனிடையே, பிரயாக்ராஜில் ஏற்பட்ட வன்முறைக்குக் காரணமாக முக்கிய நபரான ஜாவேத் முகமதுவின் வீட்டை பிரயாக்ராஜ் வளர்ச்சி ஆணையம், போலீஸ் பாதுகாப்புடன் இடித்துத் தள்ளியது. அவர் வீடு கட்டுவதற்கான திட்ட அனுமதியைப் பெறவில்லை என்றும் அதன் காரணமாகவே அந்த வீட்டை இடித்ததாகவும் பிரயாக்ராஜ் வளர்ச்சி ஆணைய அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில், குஜராத்தில் கட்ச் பகுதியில் நடைபெற்ற பேரணியில் பேசிய அசாதுதீன் ஒவைசி, “உத்தரப் பிரதேச முதலமைச்சர் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாகிவிட்டார். அவர் யாரை வேண்டுமானாலும் குற்றவாளி என அறிவிக்க முடியும். அவர்களின் வீடுகளையும் இடித்துத் தள்ள உத்தரவிட முடியும்” என்று கூறினார்.
முன்னதாக, மாநிலத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
போராட்டங்களில் தந்தை-மகள்
ஜாவேத் முகமதுவின் மகள் அஃப்ரீன் ஃபாத்திமா, உத்தரப் பிரதேச மாநிலம், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மொழியியல் படித்தார்.
பின்னர், டெல்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யூ) எம்ஏ மொழியியல் படிப்பில் சேர்ந்தார்.
அந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தில் 2019ம் ஆண்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021இல் பட்டம் பெற்றார்.
டெல்லி மற்றும் பிரயாக்ராஜில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிரான போராட்டங்களில் அவரும், அவரது தந்தை ஜாவேத்தும் பங்கு பெற்றனர். கர்நாடகத்தில் ஹிஜாப் பிரச்னை ஏற்பட்டபோதும் அவர் அங்கு நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்றார் என்பது தெரியவந்துள்ளது. தந்தையும், மகளும் பிரயாக்ராஜின் பேசுபொருளாக தற்போது மாறியுள்ளனர்.
-மணிகண்டன்









