சென்னை கோயம்பேட்டில் பட்டப்பகலில் கூலித் தொழிலாளிகள் இருவர் மதுபோதையில் கத்தியால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
சென்னை கோயம்பேடு 100 அடிச் சாலை என்பது எப்போதுமே பரபரப்பாகக் காணப்படும் சாலை இந்தச்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றது. 100 அடிச் சாலையில் உள்ள எம்எம்டிஏ காலனி பேருந்து நிறுத்தம் அருகே இன்று காலை பயணிகள் நின்று கொண்டு இருக்கும் போது கோயம்பேடு பகுதியில் கூலி வேலை செய்யும் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பாலமுருகன் மற்றும் அவருடன் வந்த ஒரு நபரும் ஒருவரை ஒருவர் கத்தியாலும் பிளேடு ஆளும் தாக்கிக் கொண்டனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறினர். அரும்பாக்கம் காவல் நிலையத்திற்கும் மற்றும் 108க்கு தகவல் தெரிவித்தும் காவலர்களோ 108 வாகனமோ அந்த பகுதிக்கு வரவில்லை. சுமார் 30 நிமிடம் நடைபெற்ற இந்தப் மோதலில் பாலமுருகனால் தாக்கப்பட்ட நபர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார்.
அவர் கிழே விழுந்த பிறகு கூட அடங்காத பாலமுருகன் தொடர்ந்து அந்த நபரைக் கருங்கல்லால் கொலை செய்ய முயற்சி செய்தார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அவரை தடுத்து கையைக் கட்டி தடுத்து நிறுத்தினர். உயர் காவல்துறை அந்த பகுதியாகச் செல்லும் பொழுது சம்பவத்தை நேரில் பார்த்தும் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாகக் கூறப்படுகிறது. ஒரு காவலர் மட்டும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார் ,பாலமுருகன் மற்றும் படுகாயம் அடைந்த நபர் இருவரையும் 108 வாகன மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பட்டப்பகலில் அதுவும் காலை வேளையில் நெரிசல் மிகுந்த பகுதியில் கத்தியால் மோதிக்கொண்ட சம்பவம் பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அரும்பாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த பகுதியில் 24 மணி நேர டாஸ்மாக் மதுபான விற்பனை நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அதிகாலை வேளையிலே போதை ஆசாமிகள் மது அருந்திவிட்டு மோதிக் கொள்ளும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதாக இப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.







