கடந்த ஆண்டு டிசம்பர் 2025இல் இண்டிகோ விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டு பல்வேறு விமானங்கள் ரத்தாகின. அந்நேரத்தில் சரியான நேரத்தில் பணத்தை திரும்பப் பெற முடியாமல் பயணிகள் தவித்தனர். இதைத் தொடர்ந்து ஏர்லைன் ரீஃபண்ட் விதிகள் தொடர்பாக சீர்த்திருத்தங்களை கொண்டு வர முடிவு செய்தது.
அதன் படி இன்று இந்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் (DGCA) ஏர்லைன் ரீஃபண்ட் விதிகள் தொடர்பான முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டது. சாதாரண பயணிகளுக்கு நன்மையையும் ஏர்லைன்களுக்கு பாதகமாகவும் இந்த சீர்த்திருத்தம் அமைந்துள்ளது.
புதிய விதிகளின் படி பயணிகள் டிக்கெட் பதிவு செய்த 48 மணி நேரத்துக்குள் ரத்து செய்யலாம் அல்லது மாற்றலாம், இதற்கு விமான நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது. மேலும் இனி வரும் காலக்கட்டத்தில் விமான பயணிகல் ஏஜென்ட் மூலம் பதிவு செய்தாலும் ரீஃபண்ட் 14 வேலை நாட்களுக்குள் கிடைக்க வேண்டும், இதற்கு ஏர்லைனே பொறுப்பு. மேலும் நேரடியாக ஏர்லைன் இணையதளத்தில் பதிவு செய்தவர்கள் 24 மணி நேரத்துக்குள் சிறு பெயர் தவறுகளை (ஸ்பெல்லிங் மிஸ்டேக்) இலவசமாக திருத்தலாம்.
இதன் மூலம் தவறுதலாக தேதி அல்லது விமானத்தை பதிவு செய்தால் 48 மணி நேரத்துக்குள் ரத்து செய்து பணத்தை இழக்காமல் மீட்டுக்கொள்ளலாம். மேலும் ஸ்பெல்லிங் தவறுகளையும் 24 மணி நேரத்துக்குள் இலவசமாக திருத்தலாம். அதே போல ஏஜென்ட் மூலம் பதிவு செய்தாலும் 14 வேலை நாட்களுக்குள் ரீஃபண்ட் கிடைத்து விடும்.
ரீஃபண்ட் தாமதமாக கிடைப்பது, ஏர்லைன்கள் சரியாக பதிலளிக்காதது மற்றும் பெயர் திருத்தம் ஆகியவை தொடர்பாக நீண்டகாலமாக பயணிகளிடம் இருந்து புகார்கள் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது செய்யப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.







