அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவரும் மருத்துவருமான சாந்தாவின் உடல், தமிழக காவல்துறையின் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
மருத்துவர் சாந்தா உடல்நலக்குறைவால், இன்று அதிகாலை 2:30 மணி அளவில் உயிரிழந்த நிலையில், அவரது உடல் அடையாறு, பழைய புற்றுநோய் மருத்துவமனைக்கு கொண்டு சொல்லப்பட்டு, அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. சாந்தாவின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், மருத்துவத்துறையினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து, மருத்துவர் சாந்தாவின் இறுதி ஊர்வலம் மாலை 5 மணி அளவில் தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். பெசன்ட் நகர் மின் மயானத்தில், மருத்துவர் சாந்தாவுக்கு தமிழக காவல்துறையினர் 24 பேர், மூன்று முறை துப்பாக்கி குண்டுகள் முழங்க, மரியாதை செலுத்தினர். இதையடுத்து, அவரது உடல் மின் மயாநத்தில் தகனம் செய்யப்பட்டது.

புற்றுநோய் குறித்த ஆராய்ச்சி மற்றும் சிகிச்சைக்காக உலகப் புகழ்பெற்றவரான மருத்துவர் சாந்தா, ஆயிரக்கணக்கான உயிர்களை, கொடிய புற்றுநோயின் பிடியில் இருந்து காப்பாற்றியவர் ஆவார். தன்னலற்ற மருத்துவ சேவைக்காக மகசேசே, பத்ம விபுஷன் ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். சாந்தாவின் மறைவுக்கு, நியூஸ்7 தமிழ் அஞ்சலி செலுத்துகிறது.







