அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவரும் மருத்துவருமான சாந்தா காலமானார்.
மருத்துவர் சாந்தாவிற்கு கடந்த 2 நாட்களாக, நெஞ்சு வலி இருந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள அவர் மறுத்து வந்ததாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, அவர் சென்னையில் அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கடுமையான நெஞ்சுவலியும், மூச்சு திணறலும் ஏற்பட்டதன் காரணமாக, மருத்துவர் சாந்தா, சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2:30 மணி அளவில் உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரது உடல், அடையாறு கேனால் பேங்க் சாலையில் உள்ள, பழைய புற்றுநோய் மருத்துவமனைக்கு கொண்டு சொல்லப்பட்டது. அங்கு, பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

தற்போது, அவரது உடலுக்கு பொதுமக்கள், மருத்துவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மருத்துவர் சாந்தாவின் உடல், இன்று மாலை 5 மணி அளவில், பெசன்ட் நகர் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

புற்றுநோய் குறித்த ஆராய்ச்சி மற்றும் சிகிச்சைக்காக உலகப் புகழ்பெற்றவரான மருத்துவர் சாந்தா, தன்னலற்ற மருத்துவ சேவைக்காக மகசேசே, பத்ம விபுஷன் ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.







