பாஜகவில் இருந்து விலகிய டாக்டர் சரவணன், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுரை மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்த இராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் போது திமுக –பாஜகவுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து மதுரை விமான நிலையத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசினர். இச்சம்பவம் தொடர்பாக 5க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் டாக்டர் சரவணன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை அவரது இல்லத்தில் சந்தித்து விமான நிலையத்தில் நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கோரினார். தொடர்ந்து, சரவணன் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், சென்னையில் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். தொடர்ந்து வீடியோ வெளியிட்டுள்ள சரவணன், 2023 புத்தாண்டு தொடக்கத்தில் அதிமுகவில் என்னை இணைந்துக் கொண்டேன். வரக்கூடிய காலங்களில் கட்சி வலுப்பெற எடப்பாடி பழனிசாமிக்கு துணையாக செயல்படுவேன் எனத் தெரிவித்துள்ளார்.







