ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் களத்தில் இறக்கி விடப்பட்டு உள்ளார். தே.மு.தி.க. தனித்து போட்டியிடுவதாக அறிவித்து மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் என்பவரை வேட்பாளராக நிறுத்தியது. நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை மறுநாள் ஈரோட்டில் பெண் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து உள்ளார்.
இந்தநிலையில் அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் யார்? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டு உள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எங்கள் சார்பில் வேட்பாளரை நிறுத்த விரும்புகிறோம் என்றும், இடைக்காலப்பொதுச்செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்தை தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது எனவும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட முடிவை தேர்தல் ஆணையம் ஏற்கக்கொள்ள உத்தரவிடக் கோரியும் முறையிடப்பட்டுள்ளது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி தினேஸ்வரி அமர்வில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முறையிடப்பட்டது. மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் 30ம் தேதி முறையிட வேண்டும் என பழனிசாமி தரப்புக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரோடு இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால்,விரைந்து விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் பழனிசாமி தீவிரமாக ஆலோசனை நடத்திய நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.







