உங்கள் அம்மாவின் நேர மேலாண்மையை கவனியுங்கள், அதன்மூலமாக நீங்கள் தேர்வுக்காக எப்படி நேரத்தை பயன்படுத்துவதை தெரிந்து கொள்வீர்கள் என்று பிரதமர் மோடி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
பள்ளி மாணவர்களின் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மாணவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் விதமாக `பரிக்ஷா பே சார்ச்சா’ என்ற நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை பிரதமர் மோடி சந்தித்து உரையாடுகிறார்.
2018-ம் ஆண்டிலிருந்து இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான ‘பரிக்ஷா பே சார்ச்சா’ நிகழ்ச்சி இன்று புதுடெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் கலந்து கொள்ள ஏற்கெனவே முன்பதிவு நடைபெற்றது. சுமார் 38 லட்சம் மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பதிவு செய்திருந்தனர். இதன்படி இந்த நிகழ்ச்சி இன்று காலையில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்களின் கேள்விக்கு பிரதமர் மோடி பதலளித்தார்.
என்னுடைய தேர்வு முடிவுகள் சிறப்பாக இல்லாத போது எப்படி என் குடும்ப சூழலை சமாளிக்க வேண்டும் என்று ஒரு மாணவர் பிரதமரிடம் கேட்டார். அதற்கு பதலளித்த பிரதமர் மோடி, குடும்பத்தில் எதிர்பார்ப்புகள் என்பது இயல்பானதுதான். ஆனால் சமூக அந்தஸ்துக்காக அந்த எதிர்பார்ப்புகள் இருந்தால் ஆரோக்கியமானது அல்ல என்று கூறினார்.
என் வேலைகள் அனைத்தும் குறிப்பிட்ட நேரத்துக்குள் எப்படி முடிப்பது என்று ஒரு மாணவர் கேட்டதற்கு பதலளித்த மோடி, நேர மேலாண்மை என்பது தேர்வுக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் மிக அவசியமானது. உங்கள் அம்மா எப்படி நேரத்தை பயன்படுத்துகிறார் என்று கவனியுங்கள். அதிலிருந்து நீங்கள் உங்கள் நேரத்தை எவ்வாறு திட்டமிடுவது என்பதை தெரிந்து கொள்ளமுடியும் என்று மோடி கூறினார்.







