படங்கள் அனைத்துமே விமர்சனங்கள் வாயிலாகவே பார்க்கப்படுகிறதுஎன்றும், அப்படி பார்ப்பது நல்லதல்ல என்றும் நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
20-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. கடந்த 15ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த விழாவில் 51 நாடுகளின் 102 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இதில் தமிழ் பிரிவில் 12 படங்களும், இந்தியன் பனோரமா பிரிவில் 3 தமிழ் படங்களும் திரையிடப்பட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிறைவு விழாவில், சிறப்பு விருந்தினராக இயக்குனரும் நடிகருமான கே.பாக்யராஜ் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற படங்களுக்கு பரிசுகளை வழங்கினார். இயக்குனர் பாரதிராஜா விழாவில் பங்கேற்க முடியாத காரணத்தால் வாழ்நாள் சாதனையாளர் விருது அவருக்கு விழா மேடையில் வழங்கப்படவில்லை. திரையிடப்பட்ட 12 தமிழ் படங்களில் வெற்றி பெற்ற 9 படங்களுக்கு சான்றிதழ், பரிசுத்தொகையுடன் விருது வழங்கப்பட்டது.
இதில் சிறந்த நடிகருக்கான விருது விஜய் சேதுபதிக்கும் (மாமனிதன்), ‘பூ’ ராமுவுக்கும் (கிடா) பகிர்ந்து வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருது கார்கி படத்துக்காக சாய் பல்லவிக்கு வழங்கப்பட்டது. சிறந்த படம், ஒளிப்பதிவு, ஒலி வடிவமைப்பு, உள்ளிட்ட பல பிரிவுகளில் தேர்வான படங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. ஸ்பெஷல் ஜூரி விருது இரவின் நிழல் படத்திற்கும், ஸ்பெஷல் மென்ஷன் விருது கருணாஸ் நடிப்பில் வெளியான ஆதார் படத்துக்கும் வழங்கப்பட்டது. தொடர்ந்து எம்.ஜி.ஆர். திரைப்பட கல்லூரி மாணவர்கள் மூலம் திரையிடப்பட்ட 9 படங்களில் 3 படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “சர்வதேச திரைப்பட விழாவில் பார்த்த படங்களை கடந்து போய் விடாமல், படங்களின் வாயிலாக இயக்குனர்கள் உங்களுக்கு ஏதாவது கடத்த முயற்சி செய்வார்கள். படத்தை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அதன் மூலம் ஆரோக்கியமான விவாதங்களில் ஈடுபடுங்கள். வாழ்க்கையின் அனுபவமாக திரைப்படம் மாறி வருகிறது. அந்த அனுபவத்தின் வாயிலாக தன்னுடைய பார்வையை ஒரு நடிகரின் வழியாக இயக்குனர் கூறுகிறார்.
அனைத்து சிறந்த இயக்குனர்களும் சிறந்த படத்தை எடுப்பார்களா என்று தெரியாது.
ஆனால் சிறந்த படங்கள் அனைவராலும் எடுக்கப்பட்டு வருகிறது. 50 வருடம் வாழ்ந்த ஒரு மனிதனின் கதையை இரண்டரை மணி நேரத்தில் சொல்ல முடியும். அந்த அனுபவத்தை இரண்டரை மணி நேர படத்தில் புரிந்து கொள்ள முடியும்.
படங்கள் அனைத்துமே விமர்சனங்கள் வாயிலாகவே பார்க்கப்படுகிறது. அப்படி பார்ப்பது நல்லதல்ல. எந்த ஒரு படத்தையும் விமர்சனங்கள் வாயிலாக பார்க்க வேண்டாம். இன்றைய காலகட்டத்தில் யூடியூபில் தவறாகப் பேசினால், பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அதனால்தான் பணம் வருகிறது. விமர்சனப் பார்வையில் படம் சரியாக பார்க்கப்படுகிறதா என்று தெரியவில்லை.
ஏற்கனவே ஒரு முறை நன்கொடை வழங்கி உள்ளேன். இப்போது சிறந்த நடிகர் விருதுக்காக வழங்கப்பட்ட பரிசுத் தொகை ரூ.25,000-ஐ, சென்னை இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் கமிட்டிக்கு நன்கொடையாக வழங்குகிறேன். எளிய மனிதன் வாழ்க்கையைப் பேசும் இந்த மாமனிதன் படத்துக்காக விருது வாங்கியதில் மிகவும் மகிழ்ச்சி. அதோடு ‘பூ’ ராமு அவர்களுடன் சிறந்த நடிகருக்கான விருதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. இந்த ஆண்டு எப்படி முடிந்திருந்தாலும் பரவாயில்லை. அடுத்த ஆண்டு புதியதாக தொடங்குங்கள். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்று பேசினார்.
தொடர்ந்து விழா மேடையில் பேசிய இயக்குனர் பார்த்திபன், “என் குருநாதரின் காலை தொட்டு கும்பிட்டேன். இப்போது இந்த விருதினை தொட்டு கும்பிடுகிறேன். இது போன்ற விருதுகளை பெரிதாக யாரும் எடுத்துக் கொள்வதில்லை. ஆஸ்கர் போன்ற விருதுகளைத் தான் பெரிதாக எடுத்துக் கொள்கிறார்கள். தமிழக அரசோடு சேர்ந்து நடத்தும் இந்த விருதுக்கு என்ன மரியாதை இருக்கிறது என்று சிலருக்கு மட்டும் தான் தெரியும்.
ஒருவரிடம் எத்தனை குழந்தை என்று கேட்கும் பொழுது சிறிய குழந்தை, பெரிய குழந்தை எத்தனை குழந்தை என கேட்க மாட்டோம். அது போன்று தான் விருது என்றாலே அது விருதுதான். ஒவ்வொரு கைத்தட்டலும் எனக்கு கிடைத்த விருதுதான். மற்றவை பற்றி நான் கவலைப்படுபவன் கிடையாது. இந்த விருதுகளை நாம் மதிக்க வேண்டும். அப்போது தான் நாளைய சினிமா சிறப்பாக அமையும்” என்றார்.