நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் படம் கடந்த 13ம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் இணைந்து நடித்த பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
மாநாடு படத்தில் கலக்கிய எஸ்.ஜே.சூர்யாவும், எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக நடிக்கும் சமுத்திரக்கனி, காமெடிக்கு முனீஸ்காந்த் என இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் பலர் நடித்து அசத்தியிருக்கின்றனர். இந்தப் படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்கியிருக்கிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன. யூ-டியூப் தளத்திலும் அதிக எண்ணிக்கையிலான முறை இந்தப் படத்தின் பாடல்கள் பார்க்கப்பட்டு ரசிக்கப்பட்டது. படமும் வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்று வருகிறது. லைக்கா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தமிழகம் முழுவதும் படத்தை விநியோகித்தது.
இந்தப் படம் தமிழகத்தில் மட்டும் ரூ.50 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளது. உலகம் முழுவதும் ரூ.75 கோடிக்கும் அதிகமான வசூல் சாதனை படைத்துள்ளது டான் படம். ரொமான்ஸ், காமெடி, எமோஷன்ஸ் என அனைத்தும் நிறைந்த ஜனரஞ்சகமான படமாக டான் உள்ளது. இதனால், திரையரங்குகளில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடும்பத்துடன் சென்று படத்தை ரசித்து வருகின்றனர்.
சிவகார்த்திகேயனின் முந்தைய படமான டாக்டர் படத்தின் வசூலை டான் படம் முறியடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. டான் படமே இவரது திரைப் பயணத்தில் மிகவும் அதிக வசூலை குவித்த படமாகத் திகழ்கிறது.








