ஈவ்டீசிங் தொல்லையால் மாணவியின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் குறித்த விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
திருச்சி திருவெறும்பூர் மலை கோவில் அருகே உள்ள நொச்சி வயல் புதூர் கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 12ம் தேதி அந்த இளைஞர் மாணவியை ஈவ்டீசிங் செய்தாதாகவும், அப்போது மாணவி தனது செருப்பால் இளைஞரை அடித்து, திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அந்த இளைஞர், இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து அந்த மாணவிக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து மாணவிக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மாணவியின் தயார் திருச்சி BHEL காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைத்து காவல்துறையினர் விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் இருந்து நியூஸ்7 தமிழுக்கு கிடைத்த தகவலில், மாணவியின் பெற்றோர் சொல்வது போல் இளைஞர்கள் ஒன்றிணைந்து விஷம் கலந்து கொடுத்ததற்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. மாணவியின் செல்போன் மற்றும் அவரது அழைப்புகளை ஆராய்ந்தபோது குற்றம் சாட்டப்பட்ட இளைஞரோடு பேசியுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.








