ஈவ்டீசிங் தொல்லையால் மாணவி உயிரிழப்பு- உறவினர்கள் போராட்டம்

ஈவ்டீசிங் தொல்லையால்  மாணவி உயிரிழந்த நிலையில் அவரின் உயிரிழப்பிற்கு காரணமாக இளைஞர்களை கைது செய்ய கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  திருச்சி திருவெறும்பூர் மலை கோவில் அருகே உள்ள நொச்சி வயல் புதூர்…

ஈவ்டீசிங் தொல்லையால்  மாணவி உயிரிழந்த நிலையில் அவரின் உயிரிழப்பிற்கு காரணமாக இளைஞர்களை கைது செய்ய கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

திருச்சி திருவெறும்பூர் மலை கோவில் அருகே உள்ள நொச்சி வயல் புதூர் கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 12ம் தேதி அந்த இளைஞர் மாணவியை ஈவ்டீசிங் செய்தாதாகவும்,  அப்போது மாணவி தனது செருப்பால் இளைஞரை அடித்து, திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அந்த இளைஞர், இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து அந்த மாணவிக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து மாணவிக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து மாணவியின் தயார் திருச்சி BHEL காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைத்து காவல்துறையினர் விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த மாணவி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனை அடுத்து மாணவியின் இறப்பிற்கு காரணமாக இளைஞர்களை கைது செய்ய வேண்டும் என கோரி மாணவியின் உறவினர்கள் மற்றும் நொச்சி வயல் புதூர் கிராம மக்கள் ஒன்றிணைந்து திருச்சி-தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் மலை கோவில் அருகே  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இருந்த போதும் கிராமமக்கள் போராட்டம் நடந்த இடத்திலிருந்து செல்லாமல் சாலையில் சாமியான பந்தல் போட்டு தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த ஆர்டிஓ தவச்செல்வமிடம், எஸ்.இ. சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டுமெனவும், குற்றம் சாட்டப்பட்ட ஒரு இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் மற்ற இரண்டு இளைஞர்களையும் கைது செய்ய வேண்டும். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாணவியின் இழப்பிற்கு ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தனர்.

மேலும், இன்று காலை கிராம மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட போது கிராம மக்களை மிகவும் தரக்குறைவாக பேசிய நவல்பட்டு காவல் ஆய்வாளர் வெற்றிவேலை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.