நீலகிரி குன்னூரில் கிராமப் பகுதியில் புகுந்த சிறுத்தை, அப் பகுதியில் இருந்த நாய் ஒன்றை வேட்டையாட முயற்சித்தது. இதில் நாய் உயிர் தப்பித்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் அண்மைக்காலமாக
வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் கரடி, சிறுத்தையால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் ஜெகதளா கிராமத்தில் வனப்பகுதியில் இருந்து கிராமத்துக்குள் நுழைந்த சிறுத்தை ஒன்று நாயை வேட்டையாட முயற்சித்தது. இந்த நிகழ்வானது அருகில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
நாயின் கழுத்தை வாயால் இறுக பற்றி கொண்டு நெடுநேரம் சிறுத்தை தரையில் படுத்திருந்தது. பின் நாயினை வாயல் தூக்கி செல்லும் போது சிறுத்தையின் வாயிலிருந்து விடுபட்ட நாய் மின்னல் வேகத்தில் ஓடி உயிர்தப்பியது. இச்சம்பவம் குறித்து அறிந்த கிராம மக்கள் அச்சம் அடைந்தனர்.
மேலும் இரவு நேரத்தில் வரும் இந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று வனத்துறைக்கு கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ரூபி.காமராஜ்









