பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சார்பில் வழங்கப்பட்ட விருந்து மற்றும் கலை நிகழ்ச்சிகளின் அழகிய தருணங்களை குறிக்கும் வீடியோவை ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பின் பேரில் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ள பிரதமர் மோடி, 23-ம் தேதி வரை அமெரிக்காவில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். நேற்று நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்றார். பின்னர், வாஷிங்டனில் உள்ள ஆண்ட்ரூஸ் விமான தளத்திற்கு வந்தடைந்ததும், பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, பிரதமர் மோடிக்கு வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. வெள்ளை மாளிகை நுழைவுவாயிலுக்கு வந்து பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அவரது மனைவி ஜில் பைடனும் வரவேற்றனர். பின்னர் துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்பட அமைச்சர்களும் பிரதமர் மோடியுடன் கைகுலுக்கி வரவேற்றனர். அப்போது பிரதமர் மோடிக்கு அதிபர் பைடன் பழமையான புத்தகம் மற்றும் கோட்டக் கேமரா, ராபர்ட் ஃப்ரோஸ்டின் எழுதிய கவிதையின் முதல் பதிப்பு உள்ளிட்டவற்றை பரிசாக வழங்கினார்.
பின்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் இணைந்து வழங்கிய அரசு விருந்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவருக்கு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மூன்று வகையான சைவ உணவுகள் பரிமாறப்பட்டன. பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் வழங்கப்பட்ட இந்த இரவு விருந்து நிகழ்ச்சியில் தொழிலதிபர் அம்பானி தனது மனைவியுடன் கலந்து கொண்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் சத்ய நாதெல்லா, சுந்தர் பிச்சை, மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா உள்ளிட்டோரும் இரவு விருந்தில் பங்கேற்றனர்.
இந்த நிலையில், ட்விட்டர் பயன்பாட்டில் எப்போதுமே ஆக்டிவாக இருக்க கூடியவரும், இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபர்களில் ஒருவருமான ஆனந்த் மஹிந்திரா பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சார்பில் வழங்கப்பட்ட விருந்து மற்றும் கலை நிகழ்ச்சிகளின் அழகிய தருணங்களை குறிக்கும் வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
https://twitter.com/anandmahindra/status/1672087902124122112?s=20
அந்த பதிவில், “வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில், பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட இரவு விருந்தில் நடந்த சில நிகழ்வுகளை பகிர்ந்து கொள்வதாக உறுதியளித்திருந்தேன். நானும் கலந்துகொண்ட அந்த விருந்தில் பல ஆச்சர்யமூட்டும் நிகழ்வுகள் நடந்தன. இரவு விருந்து நிகழ்ச்சிக்கு முன்னதாக இசை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி ஆரம்பம் முதல் இறுதிவரை இனிமையான தருணமாக இருந்தது என அதில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
ட்விட்டர் பயன்பாட்டில் எப்போதுமே ஆக்டிவாக இருக்க கூடிய ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் கிட்டத்தட்ட 1 கோடியே 4 லட்சம் Followers-களை வைத்துள்ளதோடு, அவ்வப்போது நகைச்சுவையான மற்றும் புதிரான விஷயங்களை அதில் பகிர்ந்து கொள்வதை வழக்கமாகவும் வைத்திருப்பவர். இது தவிர, அவர் பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களையும், படைப்பாற்றல் மற்றும் புதுமைகளுக்காக மக்களை பாராட்டுவதையும் வழக்கமாக கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
- பி.ஜேம்ஸ் லிசா









