தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தவெக இரட்டை நிலைபாடா?: திமுக vs தவெக ஐடி விங்!

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தவெக பல்டி என்ற திமுகவின் விமர்சனத்திற்கு தவெக பதிலடி கொடுத்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் 31-வது தென்னக மண்டலக் குழு முதல்வர்களுக்கான மாநாடு இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், “மக்கள் தொகையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததற்காக தென் மாநிலங்கள் பிரதிநிதித்துவத்தை இழக்கக்கூடாது. தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் பாதிக்காது என்ற சட்டபூர்வ உறுதிமொழி தேவை” என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில் தவெக அரசு தொகுதி மறுவரையறை குறித்து இரட்டை நிலைபாட்டில் உள்ளதாக திமுக ஐடி விங் விமர்சித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில் ”ஒரே வாரத்தில் தொகுதி மறுவரையரை விவகாரத்தில் பல்டி அடித்திருக்கிறார் முதலமைச்சர் விஜய்!

தொகுதி மறுசீரமைப்பை ஆதரிப்பவர்கள் தமிழ்நாட்டின் ’எட்டப்பர்கள்’ என ராகுல்காந்தி கூறியது இவரைத்தானா?

கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தவெகவின் இந்த இரட்டை வேட நாடகத்தை கேள்வி கேட்பார்களா? இல்லை” என்று ட்விமட்ர்சித்திருந்தது.

இந்த நிலையில் திமுக ஐடி விங்கின் கருத்துக்கு தவெக ஐடி விங் பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது, “மாமல்லபுரத்தில் இன்று நடந்த 31வது தென் மண்டல குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஆற்றிய உரையில் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் வெற்றி பெற்ற தென் மாநிலங்களின் தற்போதைய பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கும் பரந்த தொலைநோக்கு கருத்தை தெரிவித்தார்.

தமிழ் நாடு சட்டமன்றத்தில் 12.8.2026 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இதனைச் செயல் வடிவில் கூறுகிறது. அதாவது, மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543 ஆக நிர்ணயித்தல், மாநிலங்களுக்கு இடையேயான தற்போதைய இட ஒதுக்கீடு விகிதாச்சாரதை மாற்றாமல் தொடரச் செய்தல், மற்றும் வருங்காலத் தேர்தல்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்தல் ஆகிய பொருளில் தீர்மானங்களை நிறைவேற்றி 12.8.2026 அன்றே பிரதமருக்கும் நேர்முகக் கடிதம் எழுதிய நிலையில், இது குறித்து குறைந்த பட்ச புரிதல் இல்லாமல் தொகுதி மறுவரையறை குறித்து தவறானக் கருத்து பரப்பப்படுகிறது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளடு.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.