தோல்விகள், கண்ணீர், விமர்சனங்கள், காத்திருப்பு, உலகக் கோப்பை வெற்றி, மீண்டும் ஒரு இறுதிப் போட்டித் தோல்வி… லயனல் மெஸ்ஸியின் சர்வதேசக் கால்பந்துப் பயணம் என்பது ஒரு வீரனின் சாதனைக் கதை மட்டுமல்ல; ஒரு நாட்டின் கனவைத் தனது தோள்களில் சுமந்த ஒரு சிறுவனின் வாழ்க்கைப் பயணம்!
சர்வதேசப் பயணத்தின் தொடக்கம்
1987-ல் அர்ஜென்டினாவின் ரொசாரியோ நகரில் பிறந்த லயனல் மெஸ்ஸி, சிறு வயதிலேயே கால்பந்தில் அபாரத் திறமையை வெளிப்படுத்தினார். வளர்ச்சி ஹார்மோன் குறைபாட்டுக்கான சிகிச்சை தேவைப்பட்ட நிலையில், தனது 13-வது வயதில் பார்சிலோனா கிளப்பின் இளைஞர் அணியில் விளையாட ஸ்பெயினுக்குச் சென்றார்.
ஆனால், தனது சர்வதேசக் கால்பந்து வாழ்க்கையில் அவர் தேர்ந்தெடுத்தது தன்னுடைய தாய்நாடான அர்ஜென்டினாவைத்தான்.
2005-ல் அர்ஜென்டினாவின் 20 வயதுக்குட்பட்டோர் அணிக்காக விளையாடிய மெஸ்ஸி, அதே ஆண்டில் FIFA இளையோர் உலகக் கோப்பையை வென்றார். அந்தத் தொடரின் சிறந்த வீரர் மற்றும் அதிக கோல்கள் அடித்த வீரர் ஆகிய விருதுகளையும் கைப்பற்றினார்.
அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹங்கேரிக்கு எதிரான போட்டியில் அர்ஜென்டினாவின் சீனியர் அணிக்காக அறிமுகமானார். அந்த அறிமுகம், சிவப்பு அட்டையுடன் முடிவடைந்தாலும், அதற்குப் பிறகு அவர் கடந்து வந்த பாதை கால்பந்து வரலாற்றின் மிகச் சிறந்த பயணங்களில் ஒன்றாக மாறியது.
THE RISE — உலகின் கவனத்தை ஈர்த்த இளம் வீரர்
2006 உலகக் கோப்பையில் செர்பியா மற்றும் மாண்டினீக்ரோ அணிக்கு எதிராகக் களமிறங்கிய மெஸ்ஸி, தனது முதல் உலகக் கோப்பைப் போட்டியிலேயே கோல் அடித்தார். அப்போது அவருக்கு வயது 18 மட்டுமே.
2007 ‘கோபா அமெரிக்கா’வில் அர்ஜென்டினா இறுதிப் போட்டிவரை முன்னேறியது. 2008 ‘பெய்ஜிங் ஒலிம்பிக்கில்’ நைஜீரியாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்ற அர்ஜென்டினா அணியிலும் மெஸ்ஸி முக்கியப் பங்காற்றினார்.
இளம் வயதிலேயே உலகின் கவனத்தை ஈர்த்திருந்தார். ஆனால், அர்ஜென்டினாவின் சீனியர் அணிக்காக ஒரு பெரிய சர்வதேசக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற மெஸ்ஸியின் இலக்கு மட்டும் இன்னும் எட்டப்படாத கனவாகவே இருந்தது.
THE FIRST FALL — எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும்…
2010 ‘உலகக் கோப்பை’யில் அர்ஜென்டினா காலிறுதியில் வெளியேறியது. 2011 கோபா அமெரிக்காவிலும் சொந்த மண்ணில் பட்டம் வெல்லும் வாய்ப்பைத் தவறவிட்டது.
அந்த நேரத்தில் மெஸ்ஸி மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. உலகின் சிறந்த வீரராகப் போற்றப்பட்ட அவர், தனது நாட்டுக்காகவும் ஒரு பெரிய கோப்பையை வெல்ல வேண்டும் என்ற அழுத்தத்தை எதிர்கொண்டார். 2014 உலகக் கோப்பையில் அர்ஜென்டினா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. எதிரில் ஜெர்மனி. ஆட்டம் கோலின்றி நீடித்த நிலையில், கூடுதல் நேரத்தில் ஜெர்மணி வீரர் மரியோ கோட்ஸே அடித்த கோல் அர்ஜென்டினாவின் கனவை உடைத்தது. 1-0 என்ற கணக்கில் அர்ஜன்டினா தோல்வியடைந்தது.
தொடரின் சிறந்த வீரருக்கான கோல்டன் பால் விருது மெஸ்ஸிக்குக் கிடைத்தது. ஆனால், அவருக்குத் தேவைப்பட்டது தனிப்பட்ட விருது அல்ல; தனது நாட்டுக்காக உலகக் கோப்பையை வெல்வதுதான். அடுத்தடுத்து வந்த இரண்டு ஆண்டுகளும் அதே ஏமாற்றத்தைத் தந்தன.
2015 கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியில் சிலியிடம் பெனால்டி ஷூட்-அவுட்டில் தோல்வி. 2016 கோபா அமெரிக்கா நூற்றாண்டுப் போட்டியின் இறுதிப் போட்டியிலும் அதே சிலியிடம் பெனால்டி ஷூட்-அவுட்டில் தோல்வி. மூன்று ஆண்டுகளில் மூன்று பெரிய இறுதிப் போட்டிகள். ஆனால், ஒரு கோப்பைகூட இல்லை.
2016 கோபா அமெரிக்கா இறுதிப் போட்டிக்குப் பிறகு, மனமுடைந்த மெஸ்ஸி சர்வதேசக் கால்பந்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அப்போது அவருக்கு வயது 29. மெஸ்ஸியின் அறிவிப்பால் உலகமே அதிர்ந்தது. தனது நாட்டுக்காக அனைத்தையும் கொடுத்த ஒரு வீரன், இனி அர்ஜென்டினா ஜெர்ஸியை அணியப்போவதில்லை என்று அறிவித்திருந்தார்.
THE COMEBACK — மீண்டும் வந்த மெஸ்ஸி
அர்ஜென்டினா ரசிகர்களின் வேண்டுகோள்களும் ஆதரவும் மெஸ்ஸியை மீண்டும் தேசிய அணிக்குத் திரும்பச் செய்தன. 2018 உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றில் ஈக்வடாருக்கு எதிரான கடைசிப் போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்து, அர்ஜென்டினாவின் உலகக் கோப்பை வாய்ப்பை உறுதி செய்தார். ஆனால், 2018 உலகக் கோப்பையில் பிரான்ஸிடம் தோற்று அர்ஜென்டினா வெளியேறியது. 2019 கோபா அமெரிக்காவிலும் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை.
இருப்பினும், இந்தத் தோல்விகளுக்குப் பின்னால் அர்ஜென்டினா அணியில் ஒரு புதிய தலைமுறை உருவாகிக்கொண்டிருந்தது. ‘லியோனல் ஸ்கலோனி’ பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு, மெஸ்ஸியைச் சுற்றி வலுவான அணியை உருவாக்கும் முயற்சி வேகம் பெற்றது. முன்பு அணியின் வெற்றிக்காக மெஸ்ஸியையே பெரிதும் நம்பியிருந்த நிலை மாறத் தொடங்கியது. அவருக்குத் துணையாகச் செயல்படும் வீரர்களும், ஒரே இலக்குடன் போராடும் அணியும் உருவானது.
THE FIRST TROPHY — 28 ஆண்டுக் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி
2021 கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியில் எதிரில் பிரேசில். அதுவும் பிரேசிலின் சொந்த மைதானமான ‘மரக்கானா’வில்; ஏஞ்சல் டி மரியா அடித்த கோல் அர்ஜென்டினாவின் வெற்றியை உறுதி செய்தது. 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா, 28 ஆண்டுகளுக்குப் பிறகு கோபா அமெரிக்கா கோப்பையை வென்றது.
மெஸ்ஸிக்கு அர்ஜென்டினாவின் சீனியர் அணிக்காகக் கிடைத்த முதல் பெரிய சர்வதேசக் கோப்பை அது. பல ஆண்டுகளாக இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்து, கண்ணீருடன் வெளியேறிய அதே வீரன், இம்முறை கோப்பையைக் கையில் ஏந்தினார். அந்தத் தருணத்தில் மெஸ்ஸியின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி, ஒரு கோப்பையை வென்ற மகிழ்ச்சி மட்டுமல்ல. பல ஆண்டுகளாகச் சுமந்த வலியிலிருந்து கிடைத்த விடுதலை.
2022-ல் இத்தாலிக்கு எதிரான ஃபைனலிசிமா போட்டியிலும் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது அர்ஜென்டினா. ஆனால், மெஸ்ஸியின் உண்மையான இலக்கு இன்னும் முன்னால் இருந்தது.
FIFA உலகக் கோப்பை
THE WORLD CUP — கனவு நனவான தருணம்
2022 கத்தார் உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவின் பயணம் அதிர்ச்சியுடன் தொடங்கியது. முதல் போட்டியிலேயே சவுதி அரேபியாவிடம் தோல்வி. உலகமே அர்ஜென்டினாவின் வாய்ப்பு குறித்து கேள்வி எழுப்பியது.
ஆனால், மெக்சிகோவுக்கு எதிரான போட்டியில் மெஸ்ஸி அடித்த கோல் அணிக்குப் புதிய நம்பிக்கையைக் கொடுத்தது. அடுத்தடுத்த போட்டிகளில் ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, குரோஷியா ஆகிய அணிகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது அர்ஜென்டினா.
எதிரில் நடப்புச் சாம்பியனான பிரான்ஸ். மெஸ்ஸி இரண்டு கோல்கள் அடித்த அந்த இறுதிப் போட்டி, கூடுதல் நேர முடிவில் 3-3 என்ற சமநிலையில் முடிந்தது. பெனால்டி ஷூட்-அவுட்டில் 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது அர்ஜென்டினா. 36 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையை வென்றது அந்த அணி. ஏழு கோல்கள், மூன்று அசிஸ்ட்கள். தொடரின் சிறந்த வீரருக்கான கோல்டன் பால் விருது.
2006-ல் ஒரு இளம் வீரனாக உலகக் கோப்பையில் அறிமுகமானவர், 2014-ல் இறுதிப் போட்டியில் தோற்றவர், 2016-ல் கண்ணீருடன் ஓய்வை அறிவித்தவர் — இறுதியில் உலகக் கோப்பையைத் தனது கைகளில் ஏந்தினார். பல ஆண்டுகளாக அவரைத் துரத்திய கேள்விக்கு, அந்தத் தங்கக் கோப்பையே பதிலாக அமைந்தது.
2024 கோபா அமெரிக்கா — மீண்டும் சாம்பியன்
உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகும் மெஸ்ஸியின் பயணம் தொடர்ந்தது. 2024 கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியில் கொலம்பியாவை எதிர்கொண்டது அர்ஜென்டினா. ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் சென்ற நிலையில், லௌதாரோ மார்டினஸ் அடித்த கோல் 1-0 என்ற வெற்றியை உறுதி செய்தது. தொடர்ந்து இரண்டாவது முறையாகக் கோபா அமெரிக்கா கோப்பையை வென்றது அர்ஜென்டினா. காயம் காரணமாக இறுதிப் போட்டியின் போது மெஸ்ஸி மைதானத்திலிருந்து வெளியேற வேண்டியிருந்தாலும், அவரது சக வீரர்கள் வெற்றியை உறுதி செய்தனர்.
2021 கோபா அமெரிக்கா, 2022 உலகக் கோப்பை, 2024 கோபா அமெரிக்கா என அடுத்தடுத்து கோப்பைகளை வென்று அசத்தினார். ஒரு காலத்தில் கோப்பை வெல்ல முடியாத வீரர் என்று விமர்சிக்கப்பட்ட மெஸ்ஸி, இப்போது அர்ஜென்டினாவுக்காகத் தொடர்ந்து மூன்று முக்கிய சர்வதேசப் பட்டங்களை வென்ற அணியின் தலைவராக நின்றார்.
2026 உலகக் கோப்பை — தோள்களில் ஒரு தேசத்தின் கனவு!
2022-ல் உலகக் கோப்பையை வென்ற மெஸ்ஸி, 2026-ல் தனது ஆறாவது உலகக் கோப்பைப் பயணத்தைத் தொடங்கினார். அவருக்கு கிட்டத்தட்ட 39 வயது. தனது சர்வதேச வாழ்க்கையின் இறுதிக்கட்டம். ஆனால், இன்னும் ஒரு முறை உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவு மட்டும் மாறவில்லை.
இந்த முறை, மைதானத்திற்கு வெளியேயும் மெஸ்ஸி மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டார். அவரது தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். குடும்பத்தைப் பற்றிய கவலையும் மன அழுத்தமும் இருந்தபோதும், அர்ஜென்டினா ஜெர்ஸியை அணிந்து களமிறங்கினார். அல்ஜீரியாவுக்கு எதிரான முதல் போட்டியில் கோல் அடித்தபோது, உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டார் மெஸ்ஸி. பின்னர், விளையாட்டுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட காரணங்களால் அந்த உணர்ச்சி வெளிப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
ஆனால், களத்தில் அவரது ஆட்டம் மட்டும் குறையவில்லை. இந்த உலகக் கோப்பையில் எட்டு கோல்கள், நான்கு அசிஸ்ட்கள் என அசத்தினார். முக்கியமான போட்டிகளில் கோல் அடித்து, சக வீரர்களுக்குக் கோல் வாய்ப்புகளை உருவாக்கி, அர்ஜென்டினாவை இறுதிப் போட்டிவரை அழைத்துச் சென்றார். 39 வயதை நெருங்கிய நிலையிலும் உலகின் மிகப்பெரிய கால்பந்துத் தொடரில் அவர் வெளிப்படுத்திய ஆட்டம் வியப்புக்குரியதாக இருந்தது.
ஒரு கட்டத்தில், அர்ஜென்டினாவின் தாக்குதல் ஆட்டத்தில் மெஸ்ஸியின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமானது என்பது ஒவ்வொரு போட்டியிலும் வெளிப்பட்டது. அணியின் கனவைத் தனது தோள்களில் சுமந்துகொண்டு, இன்னொரு முறை உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பை நோக்கி முன்னேறினார்.
ஆனால், இறுதிப் போட்டியில் எதிரில் ஸ்பெயின். பரபரப்பாக நடைபெற்ற போட்டி கோலின்றி நீடித்த நிலையில், கூடுதல் நேரத்தில் ஸ்பெயின் அடித்த கோல் ஆட்டத்தின் முடிவைத் தீர்மானித்தது. 1-0 என்ற கணக்கில் தோல்வியடைந்த அர்ஜென்டினா, உலகக் கோப்பையைத் தக்கவைக்கத் தவறியது.
மீண்டும் ஒரு இறுதிப் போட்டி. மீண்டும் ஒரு தோல்வி. ஆனால், இந்த முறை அந்தத் தோல்வியின் பின்னணியில் வேறொரு வலியும் இருந்தது.
உலகக் கோப்பை இறுதிப் போட்டி முடிந்து சில வாரங்களுக்குப் பிறகு, 2026 ஆகஸ்ட் 8-ம் தேதி, மெஸ்ஸியின் தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி தனது 68-வது வயதில் காலமானார். தனது கால்பந்து வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்து துணையாக இருந்த தந்தையை இழந்தது, மெஸ்ஸியின் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகப்பெரிய இழப்பாக அமைந்தது. உலகக் கோப்பைக் கனவு மீண்டும் தகர்ந்திருந்தது. குடும்பத்திலும் பேரிழப்பு ஏற்பட்டிருந்தது.
ஆனாலும், மெஸ்ஸியின் இந்தப் பயணம் தோல்வியால் மட்டும் வரையறுக்கப்பட வேண்டியதல்ல. எட்டு கோல்கள், நான்கு அசிஸ்ட்கள் எனப் பதிவு செய்து, தனது அணியை இறுதிப் போட்டிவரை வழிநடத்திய அவரது ஆட்டம், அவரது திறமையையும் மன உறுதியையும் வெளிப்படுத்தியது. 2026 உலகக் கோப்பை அவருக்கு இன்னொரு சாம்பியன் பட்டத்தைத் தரவில்லை. ஆனால், அவரது நீண்ட சர்வதேசப் பயணத்தின் மறக்க முடியாத அத்தியாயமாக அமைந்தது.
மெஸ்ஸி vs மரடோனா vs ரொனால்டோ!
மெஸ்ஸி vs ரொனால்டோ, மெஸ்ஸி vs மரடோனா… கால்பந்து உலகில் இந்த ஒப்பீடுகள் எப்போதுமே தொடரும். ஆனால், மெஸ்ஸியின் சர்வதேசப் பயணத்தில் அவர் எதிர்கொண்ட அழுத்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
1986-ல் மரடோனா தலைமையில் அர்ஜென்டினா உலகக் கோப்பையை வென்றதால், அதற்குப் பிறகு வந்த மெஸ்ஸியும் அதே சாதனையை நிகழ்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், மரடோனா வென்ற உலகக் கோப்பை மெஸ்ஸிக்கு எந்த வகையிலும் உதவவில்லை. மாறாக, அந்தச் சாதனையை மீண்டும் நிகழ்த்த வேண்டும் என்ற கூடுதல் அழுத்தத்தையே உருவாக்கியது.
மேலும், மரடோனாவுடன் விளையாடிய வீரர்களின் தரமும், மெஸ்ஸியுடன் விளையாடிய வீரர்களின் தரமும் ஒன்றுதானா என்ற கேள்வியும் உள்ளது. வெவ்வேறு தலைமுறைகளின் அணிகளை நேரடியாக ஒப்பிடுவது எளிதல்ல.
ரொனால்டோவும் போர்ச்சுகலுக்காகப் பல சவால்களையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டார். ஆனால், மெஸ்ஸியைப் போல ஏற்கெனவே உலகக் கோப்பையை வென்ற ஜாம்பவானுடன் ஒப்பிடப்படும் அதே வரலாற்றுப் பின்னணி அவருக்கு இல்லை. ரொனால்டோ 2016-ல் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற நிலையில், மெஸ்ஸி 2021 கோபா அமெரிக்கா, 2022 உலகக் கோப்பை, 2024 கோபா அமெரிக்கா என அர்ஜென்டினாவுக்காக முக்கியக் கோப்பைகளைக் கைப்பற்றினார்.
இறுதியில், யார் சிறந்தவர் என்ற விவாதத்தைத் தாண்டி, மரடோனா உருவாக்கிய எதிர்பார்ப்பைச் சுமந்து, பல தோல்விகளைக் கடந்து, தனது நாட்டின் உலகக் கோப்பைக் கனவை நனவாக்கியதுதான் மெஸ்ஸியின் சர்வதேசப் பயணத்தின் மிகப்பெரிய சிறப்பு!
THE LEGACY — ஒரு வீரனைத் தாண்டிய அடையாளம்
இத்தனை ஆண்டுகளில் மெஸ்ஸியின் பயணம் பலமுறை முடிவுக்கு வந்துவிட்டதாகத் தோன்றியது. ஆனால், ஒவ்வொரு முறையும் அவர் மீண்டும் எழுந்தார். 2026 உலகக் கோப்பை முடிந்த பிறகு, சர்வதேசக் கால்பந்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் மெஸ்ஸி. 2005-ல் தொடங்கிய பயணம், 2026 அக்டோபர் 6-ம் தேதி பெனின் அணிக்கு எதிரான பிரியாவிடைப் போட்டியுடன் நிறைவடைந்தது. அந்தப் போட்டியில் கோல் அடித்ததோடு, இரண்டு அசிஸ்ட்களையும் வழங்கி அர்ஜென்டினா ஜெர்ஸிக்கு விடை கொடுத்தார்.
ஆனால், மெஸ்ஸி விட்டுச் செல்வது வெறும் புள்ளிவிவரங்களையோ கோப்பைகளையோ மட்டுமல்ல. ஒரு காலத்தில் அர்ஜென்டினாவின் கனவைத் தனியாகச் சுமப்பதாகத் தோன்றிய வீரர், பின்னர் தனது அணியினருடன் இணைந்து அந்தக் கனவை நனவாக்கினார். அவருக்குப் பின்னால் ஒரு புதிய தலைமுறை உருவானது. அவர் போராடிய விதம், அடுத்த தலைமுறைக்கு ஒரு நம்பிக்கையாக மாறியது.
THE LITTLE BOY FROM ROSARIO — இறுதிப் பக்கம்!
ரொசாரியோவில் பிறந்த அந்தச் சின்னப் பையன், ஒரு நாள் உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக மாறுவார் என்று அப்போது யாருக்குத் தெரியும்?. ஒரு நாட்டின் கனவாக மாறினார். கோடிக்கணக்கான ரசிகர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவாக மாறினார்.
மெஸ்ஸியின் சர்வதேசப் பயணம் முடிந்திருக்கலாம். ஆனால், அவர் உருவாக்கிய நினைவுகளுக்கும், அவர் கொடுத்த மகிழ்ச்சிக்கும், அவர் கற்றுக்கொடுத்த விடாமுயற்சிக்கும் முடிவே கிடையாது.
இக்பால் பாசித் – விளையாட்டு பிரிவு செய்தியாளர்.




