தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்களை கைது செய்ய வேண்டும் – பிரியாவின் தந்தை, உறவினர்கள் பேட்டி

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மரணத்திற்கு, தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்களை கைது செய்ய வேண்டும் என அவரது தந்தையும், உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.   சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பிரியா (17). கால்பந்தாட்ட…

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மரணத்திற்கு, தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்களை கைது செய்ய வேண்டும் என அவரது தந்தையும், உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பிரியா (17). கால்பந்தாட்ட வீராங்கனையான இவர் ராணி மேரி கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இவருக்கு கடந்த 7-ஆம் தேதி மூட்டு வழி பிரச்னை காரணமாக, கொளத்தூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் காலில் கட்டப்பட்ட கட்டு காரணமாக ரத்த ஓட்டம் இல்லாமல், காலில் இரத்த கட்டு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, பிரியாவின் வலதுகால் துண்டித்து அகற்றப்பட்டது. இந்நிலையில், அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்ததால்தான் பிரியா இறந்துவிட்டதாக அவரது பெற்றோரும், உறவினர்களும் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக பிரியாவின் தந்தை ரவிக்குமார் மருத்துவமனையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், தனது மகளுக்கு கால்வலி ஏற்பட்டுள்ளதாக கொளத்தூர் மருத்துவமனைக்கு சென்றபோது, ஜவ்வு தான் கிழிந்துள்ளது என்றும் ஒரு மணி நேரத்தில் சரியாகிவிடும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால், அவர்கள் சிகிச்சையின்போது, ரத்தம் அதிக அளவு வந்ததால், இறுக்கமாக கட்டு போட்டு விட்டு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டனர் என குற்றம்சாட்டினார்.

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீடு திட்டம் வந்தபிறகு சிகிச்சை மேற்கொள்வதாக மருத்துவர்கள் கூறியதாகவும், அதற்குள் காலில் ரத்தம் உறைந்து தன் மகள் இறந்துவிட்டதாகவும் வேதனையுடன் தெரிவித்தார். மேலும், கவனக்குறைவாக செயல்பட்டதாக மருத்துவர்கள் 2 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய பிரியாவின் தந்தை ரவிக்குமார் மற்றும் உறவினர்கள் பிரியா இறப்பிற்கு காரணமான மருத்துவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.