ரயில்களில் பட்டாசுகளை எடுத்துச் செல்ல வேண்டாம் – பயணிகளுக்கு எச்சரிக்கை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை கோட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், பண்டிகைக் கால கூட்ட நெரிசலின்போது பாதுகாப்பான, சீரான மற்றும் சிரமமற்ற பயணத்தை ஏற்படுத்துவதற்கும், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ரயில்களில் பட்டாசுகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என வேண்டுகோள்:

பயணிகள் ரயில்களிலோ அல்லது ரயில் நிலைய வளாகங்களுக்குள்ளோ பட்டாசுகள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் இதர ஆபத்தான பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என சென்னை கோட்டம் கேட்டுக்கொள்கிறது.

இத்தகைய பொருட்கள், குறிப்பாக மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பெரும் தீ விபத்து அபாயத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால் பயணிகள் மற்றும் ரயில்வே பணியாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். சிறிய அளவிலான தீப்பொறிகூட பெரும் தீ விபத்தை ஏற்படுத்தி, கடுமையான காயங்கள் மற்றும் உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கும்.

எனவே, பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும், தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்வதைத் தவிர்க்கவும், ரயில்வே பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விதிமீறல்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை:

பட்டாசுகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட மற்றும் ஆபத்தான பொருட்களை ரயில்களில் எடுத்துச் செல்வது, ரயில்வே சட்டம், 1989-ன் தொடர்புடைய பிரிவுகளின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

இத்தகைய விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின்படி அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ரூ.1,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். மேலும், இத்தகைய விதிமீறல்களால் ஏற்படும் இழப்பு, சேதம் அல்லது காயங்களுக்கும் சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்க நேரிடும்.

தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள்:

தடை செய்யப்பட்ட மற்றும் அபாயகரமான பொருட்கள் ரயில்களில் எடுத்துச் செல்லப்படுவதைத் தடுத்து, அவற்றைக் கண்டறிவதற்காக வெடிபொருட்களைக் கண்டறியும் கருவிகள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், சிசிடிவி (CCTV) கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், பயணிகள் தொடர்பான குற்றச் செயல்களைத் தடுப்பதற்கும், பாதுகாப்பு தொடர்பான புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கும் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ரயில்வே பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து பயணிகளுக்கு எடுத்துரைக்கும் வகையில் ஒலிபெருக்கி அறிவிப்புகள் மற்றும் சுவரொட்டிகள், மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

சந்தேகத்திற்கிடமான உடைமைகள் அல்லது நடவடிக்கைகள் குறித்து ரயில்வே பாதுகாப்புப் படை (RPF), அரசு ரயில்வே காவல் (GRP), பயணச்சீட்டு பரிசோதகர்கள் அல்லது நிலைய அதிகாரிகளிடம் பயணிகள் உடனடியாகத் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், உதவிக்கு இரயில்வே பாதுகாப்பு உதவி எண் 139-ஐயும் தொடர்புகொள்ளலாம்.

பயணிகள் விழிப்புணர்வு மற்றும் தூய்மைப் பணிகள்:

சென்னை கோட்ட இரயில்வே பாதுகாப்புப் படை (RPF), தெற்கு ரயில்வே கலாசாரக் குழுவுடன் இணைந்து, சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை எழும்பூர் உள்ளிட்ட முக்கிய இரயில் முனையங்களில் தூய்மை மற்றும் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது.

தெற்கு ரயில்வேயின் காவல்துறைத் தலைவர் மற்றும் முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர் கே. அருள் ஜோதி மற்றும் சென்னை கோட்டத்தின் மூத்த கோட்ட பாதுகாப்பு ஆணையர் வல்லேஸ்வர பாபுஜி தோகலா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி இந்நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இந்நிகழ்ச்சிகளின்போது, ரயில்களில் பட்டாசுகள் மற்றும் தடை செய்யப்பட்ட இதர எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்வதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், ரயில்வே பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுமாறும் வலியுறுத்தப்பட்டது.

ரயில் நிலையங்கள் மற்றும் இரயில்களில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள்:
கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துதல், பயணிகள் வரிசையை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நுழைவு, வெளியேறும் வாயில்கள், நடைமேடைகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, கூடுதல் இரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர், பெரம்பூர், தாம்பரம், சென்னை கடற்கரை, மாம்பலம் மற்றும் பரங்கிமலை உள்ளிட்ட முக்கிய இரயில் நிலையங்களிலும், இரயில்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

பண்டிகைக் காலத்தில் பாதுகாப்பான பயணத்திற்கு பயணிகளின் ஒத்துழைப்பு அவசியம்:
பயணிகள் அனுமதிக்கப்பட்ட உடைமைகளை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு தொடர்பான அனைத்து அறிவுறுத்தல்களையும் பின்பற்ற வேண்டும் என்றும் சென்னை கோட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீ விபத்து அபாயங்களைத் தடுப்பதற்கும், ஒழுங்கைப் பராமரிப்பதற்கும், பண்டிகைக் கால கூட்ட நெரிசலின்போது பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்கும் பயணிகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்.

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம், அனைத்து பயணிகளுக்கும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு தனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், சக பயணிகள் மற்றும் ரயில்வே பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு, பொறுப்புணர்வுடன் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது. பொறுப்புணர்வுடன் தீபாவளியைக் கொண்டாடுவோம். பயணிகளின் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பாகும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.