9 மாவட்டங்களிலும் சேர்மன் பதவியை கைப்பற்றியது திமுக

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற 9 மாவட்டங்களிலும் மாவட்ட சேர்மன் பதவியை திமுக கைப்பற்றியுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், தென்காசி, திருநெல்வேலி உட்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல், கடந்த 6 மற்றும்…

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற 9 மாவட்டங்களிலும் மாவட்ட சேர்மன் பதவியை திமுக கைப்பற்றியுள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், தென்காசி, திருநெல்வேலி உட்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல், கடந்த 6 மற்றும் 9-ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது. வாக்குகள் கடந்த 12-ஆம் தேதி எண்ணப்பட்டன. இதில் தி.மு.க. 139 மாவட்ட கவுன்சிலர்கள், 982 பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர்கள் பதவியிடங்களை கைப்பற்றியது. பஞ்சாயத்து தலைவர் தேர்தலிலும் பெரும்பான்மையான இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றது.
இதையடுத்து மாவட்ட பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய பெருந்தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது.

இதில், தேர்தல் நடைபெற்ற 9 மாவட்டங்களிலும் மாவட்ட சேர்மன் பதவியை திமுக கைப்பற்றியுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட சேர்மனாக திமுகவை சேர்ந்த செம்பருத்தி துர்கேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட சேர்மனாக படப்பை மனோகரனும், விழுப்புரம் மாவட்ட சேர்மனாக ஜெயச்சந்திரனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்ட சேர்மனாக திமுக சார்பில் போட்டியிட்ட புவனேஸ்வரி பெருமாளும், வேலூர் மாவட்ட சேர்மனாக திமுகவை சேர்ந்த பாபுவும், ராணிப்பேட்டை மாவட்ட சேர்மனாக ஜெயந்தி திருமூர்த்தியும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

இதேபோல், திருப்பத்தூர் மாவட்ட சேர்மன் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட சூர்யகுமாரும் திருநெல்வேலி மாவட்ட சேர்மன் பதவிக்கு போட்டியிட்ட திமுகவை சேர்ந்த வி.எஸ்.ஆர்.ஜெகதீஷும் வெற்றி பெற்றனர். தென்காசி மாவட்ட சேர்மனாக திமுகவை தமிழ்செல்வி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.