அதிமுகவை முடக்கும் முயற்சிகளை முறியடிப்போம் என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக நிர்வாகியும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவருமான ஆர். இளங்கோவன் வீட்டிலும், அவரது உறவினர்கள் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை என்ற பெயரில் திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறியுள்ளார்.
அதிமுகவின் செயல்பாடுகளை முடக்கும் வகையில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு திமுக அரசால் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
சோதனைகளை சாதனைகளாக்கி வெற்றி நடைபோடும் அதிமுகவை அழிக்க நினைக்கும் திமுகவின் தொடர் முயற்சியானது அதிமுக உண்மை தொண்டர்களின் நல்லாசியோடு முறியடிக்கப்படும் எனவும், திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் விரைவில் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.








