திராவிட முன்னேற்ற கழகத்தின் 15ஆவது பொதுத் தேர்தலில் மாநகர பகுதி செயலாளர் பதவிக்கு போட்டியிடுபவர்களுக்கான வார்டு வரையறை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளில் 4 மாநகராட்சி தவிர்த்து மற்ற மாநகராட்சி பகுதிகளுக்கான வார்டு வரையறையை திமுக தலைமை வெளியிட்டுள்ளது.
திமுகவின் உட்கட்சி தேர்தல் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கிளைக் கழக தேர்தல்கள் முடிந்து விட்டன. அவற்றில் சுமார் 60 முதல் 70 சதவிகிதம் பேருக்கு தேர்வு சான்றிதழ்களும் அளிக்கப்பட்டுவிட்டன. அதன் அடிப்படையில் பேரூர், நகர செயலாளர்களுக்கான மனுக்கள் பெறப்பட்டு விட்டன. அதன் முடிவுகளும் வெளியாகியுள்ளன. தற்போது மாநகர வட்ட செயலாளர் தேர்தல்கள் நடைபெற்றன. இது முடிந்ததும் ஒன்றிய செயலாளர்கள் தேர்தல் நடைபெற்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தற்போது தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளில் சென்னை, தாம்பரம், தஞ்சாவூர் மற்றும் நெல்லை தவிர்த்து மற்ற மாநகர பகுதி செயலாளர் தேர்தலுக்கான வார்டு வரையறை வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிறிய மாநகராட்சி என்றால் ஒரு பகுதி செயலாளர்களுக்கு குறைந்தது மூன்று வார்டுகள் இடம் பெறும் வகையில் அந்த அறிவிப்பு அமைந்துள்ளது. திருச்சி உள்ளிட்ட சில மாநகர பகுதிகளில் அரசு அறிவித்துள்ள வார்டு எண்ணிக்கையை விட அதிக வார்டு செயலாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். இவைகள் ரத்து செய்யப்பட்டு மாநகராட்சியில் உள்ள வார்டு கவுன்சிலர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வார்டுகள் அமைக்கப்பட்டன. அதன் அடிப்படையில் தற்போது பகுதி செயலாளர் தேர்தலும் நடைபெறவுள்ளது. அதற்கேற்றாற்போல் பகுதி வரையறையும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் பகுதி செயலாளர் தேர்தலில் போட்டியிட விரும்புவர்களுக்கு அந்த பகுதி செயலாளர்களுக்கு கீழ் எந்தெந்த வார்டுகள் வரும் என்ற எண்ணிக்கை குறித்த தகவல் இன்றைய முரசொலியில் வெளியாகியுள்ளது. இதில் தேர்தல் எப்போது நடைபெறும் என்ற தகவல் இடம்பெறவில்லை. ஆனால் வரும் நாட்களில் பகுதி செயலாளர் தேர்தலை தேர்தல் பொறுப்பாளர்கள் நடத்துவார்கள் எனத் தெரிகிறது.
இவை முடிவுற்ற பின்னர் மாவட்ட செயலாளர்கள் தேர்தலுக்குப் பிறகு திமுகவின் தலைவர், பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும். பொதுக்குழுவில் ஒப்புதல் பெற்று தேர்தல் ஆணையத்திற்கு புதிய நிர்வாகிகள் பட்டியலை அனுப்ப வேண்டும். இதுதான் திமுகவின் தேர்தல் நடைமுறையாக உள்ளது.
சென்னை, தாம்பரம், நெல்லை மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட மாநகர பகுதி செயலாளர்களுக்கு வார்டு வரையறை ஏன் வெளியிடப்படவில்லை திமுக மூத்த நிர்வாகிகளிடம் பேசியபோது, நெல்லை மற்றும் தஞ்சாவூரை பொறுத்தவரை சிறிய மாநகராட்சியான இந்த மாநகராட்சிகளில் பகுதி செயலாளர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவற்றை குறைத்துவிட்டு பகுதி செயலாளர் வார்டு வரையரை வெளியாகும் எனத் தெரிவித்தனர். சென்னை மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்கான பகுதி வரையறையை இப்போது அறிவித்தால் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகும் என்பதால் இவை குறித்த அறிவிப்பு மாவட்ட செயலாளர் தேர்தல் அறிவிப்போடு சேர்ந்து வெளியாகும் எனக் கூறுகின்றனர்.
இலா. தேவா இக்னேசியஸ் சிரில்