சாட்டையை கையில் எடுக்கிறார் ஸ்டாலின் என்பதே திமுக வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக உள்ளது. இனி ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும், அறிவாலயத்தின் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள் என்பதே அதன் பொருள் என விளக்குகின்றனர் மூத்த நிர்வாகிகள். இதுகுறித்த தகவல்களை பகிர்கிறார் இராமானுஜம்.
திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 28ஆம் தேதியன்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரை முருகன் அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினின் திட்டம் என்னவாக இருக்கும் என அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தபோது, அமைச்சரவை மாற்றம் குறித்து அவர் ஏதாவது சூசகமாக தெரிவிப்பார் என்றே மாவட்டச் செயலாளர்கள் கருதியுள்ளனர். அதுகுறித்தும் அவர் பேசுவார் என்றாலும், மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அமைச்சர்களின் செயல்பாடுகள் மட்டுமல்ல. மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகளும் கண்காணிப்பில் உள்ளதை திமுக தலைவரும், முதலமைச்சருமான முக ஸ்டாலின் தெரிவிக்க வாய்ப்புள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் ஐ-பேக் மூலம் திமுக மாவட்ட நிர்வாகிகளின் நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் விசாரிக்கப்பட்டு வந்தன. இப்போது அந்த பணியை கட்சியின் தலைமையே எடுத்துக்கொண்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த தொகுதிகளில் எதனால் கழக வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டார் என்ற புள்ளி விபரம் முதலமைச்சர் ஸ்டாலினின் கையில் உள்ளது. இந்த நிலையில் ஆட்சிக்கு வந்த ஓராண்டில் மாவட்டச் செயலாளர்களின் நடவடிக்கைகள் எப்படி இருந்தன என்ற தகவலும் அவரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாம். அதன் அடிப்படையில் மாவட்டச் செயலாளர்கள் ஆட்சிக்கு களங்கம் விளைவிக்காமல் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து சூசகமாக ஸ்டாலின் வகுப்பே எடுப்பார் என்றே தெரிகிறது. இனி அமைச்சரவை மட்டுமல்ல, மாவட்டச் செயலாளர்களும் சரிவர செயல்படவில்லை என்றால் தயவு தாட்சணயமின்றி மாற்றப்படுவார்கள் என முதலமைச்சருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக ஒரு கட்டுகோப்பான இயக்கம் என்ற சூழலை உருவாக்கவே ஸ்டாலின் விரும்புகிறாராம். அதன் அடிப்படையில் அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் இருக்கும் என அறிவாலய வட்டாரங்களில் பேசப்படுகிறது. இது ஒருபுறமிருக்க , திமுக உட்கட்சித் தேர்தலில் பல்வேறு இடங்களில் தற்போதைய மாவட்டச் செயலாளர்கள் எதிர்தரப்பினர் மனுக்களை கூட வாங்க அனுமதிக்கவில்லை என்ற புகார்கள் அதிகளவில் அறிவாலயத்தின் கதவை தட்டியுள்ளன. அப்போது அவர்களுக்கு நேரடியாக அறிவாலயத்திலேயே மனுக்களை பெற்றுக் கொள்ளுங்கள் கூறப்பட்டதாம். அப்படிப்பட்ட சூழலை உருவாக்கியவர்கள் மீதும் ஸ்டாலின் சாட்டையை சுழற்றுவார் எனத்தெரிகிறது. திமுக மாவட்டச் செயலாளர் தேர்தல் என்பது அதிமுகவில் ஜெயலலிதா காலத்தில் அக்கட்சியில் எப்படி மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டார்களோ அதேமுறையை இங்கும் பின்பற்ற வாய்ப்புகள் அதிகம் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கட்சிக்காக கடுமையாக உழைத்து ஓரங்கப்பட்டவர்களுக்கு உரிய மரியாதையை மாவட்டச் செயலாளர்கள் வழங்க வேண்டும் எனவும், ஒற்றுமையே நமது பலம் என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் எனவும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அக்கூட்டத்தில் வலியுறுத்த அதிக வாய்ப்புள்ளது எனத் தெரிகிறது. அமைச்சரவை மாற்றம் எப்போது என்பது பின்னர் அறிக்கையாக வெளிவரும் எனத் தெரிகிறது.
இராமானுஜம்.கி








