தனது குடும்ப உறுப்பினர்களை கட்சிக்குள் கொண்டுவருவது மட்டுமே திமுகவின் கொள்கை என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”அதிமுக வலுவாக இருப்பதை பார்த்து பயந்ததால், அதிமுக உடைந்துள்ளதாக
முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். திமுக பொதுக்குழுவில், முதலமைச்சர் மோளத்திற்கு இருப்பாகம் அடி போல தனது நிலைமை உள்ளது என பேசியது, இதுவரை எந்த முதலமைச்சரும், எந்த காலகட்டத்திலும் பேசாத ஒன்று முதலமைச்சர் ஸ்டாலின் மனம் வெதும்பி பேசியுள்ளார்.
தனது நிர்வாக திறன் குறைபாட்டை கூறுகிறாரா? கட்சியின் நிர்வாகிகளை குறிப்பிடுகிறாரா? என தெரியாத அளவிற்கு பயத்துடன் பேசியுள்ளார். அதிமுகவில் நீக்கப்பட்ட மைத்ரேயன் இதுவரை அதிமுகவிற்காக எந்த ஒரு செயலையும் செய்தது இல்லை. அவருடன் யாரும் இல்லை. அவரால் அதிமுகவிற்கு எந்த பலனும் இல்லை, பாதிப்பும் இல்லை. அதிமுகவிற்கு எந்த கொள்கையும் இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் திமுகவை எதிர்ப்பது மட்டுமே அதிமுகவின் கொள்கை.
எந்த கொள்கையும் இல்லாத அதிமுகவை மக்கள் 32 ஆண்டுகள் ஆட்சியில் வைத்திருப்பார்களா? மக்களுக்காக பல நலத்திட்டங்களை கொடுத்த கட்சி அதிமுக. திமுக, மக்களுக்காக கொடுத்த திட்டங்கள் எல்லாம் குறுகிய கால நலத்திட்டங்கள் மட்டும் தான். தனது குடும்ப உறுப்பினர்களை கட்சிக்குள் கொண்டுவருவது மட்டுமே திமுகவின் கொள்கை. அதிமுக, எம்ஜிஆர் வகுத்து தந்த கொள்கையில் சரியாக சென்று கொண்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.







