உதய சூரியன் சின்னம் கோரிய உத்தவ் தாக்கரே-தேர்தல் ஆணையம் ஒதுக்கிய சின்னம் என்ன?

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரேக்கு எதிராக திரும்பியதை அடுத்து கடந்த ஜூன் மாதம் சிவசேனா இரண்டாக உடைந்தது. தற்போது அந்த கட்சி இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது. இருதரப்பும் தாங்கள் தான்…

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரேக்கு எதிராக திரும்பியதை அடுத்து கடந்த ஜூன் மாதம் சிவசேனா இரண்டாக உடைந்தது. தற்போது அந்த கட்சி இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது. இருதரப்பும் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என உரிமை கோரி வருகின்றனர்.

அடுத்த மாதம் 3-ந் தேதி நடைபெற உள்ள அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 2 அணிகளும் பயன்படுத்த முடியாத வகையில் சிவசேனாவின் பெயர், வில், அம்பு சின்னத்தை தேர்தல் ஆணையம் அதிரடியாக முடக்கியது.

இந்நிலையில், கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை ஒதுக்கக் கோரி இரு தரப்பும் தேர்தல் ஆணையத்தை அணுகியது. அதன்படி, தேர்தல் ஆணையம் இரு தரப்புக்கும் கட்சி சின்னத்தையும், பெயரையும் ஒதுக்கியுள்ளது.

எரியும் தீப்பந்தம் சின்னம் உத்தவ் தாக்கரே அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கட்சியின் பெயர் சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) என அழைக்கப்படும்.
ஏக்நாத் ஷிண்டே அணிக்கு பாலாசாகேபன்சி சிவசேனா என்ற பெயரை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. திரிசூலம் சின்னம் மதம் சார்ந்து இருப்பதால் அதை ஒதுக்க முடியாது என்றும் உதய சூரியன் சின்னம் ஏற்கனவே திமுக பதிவு செய்து வைத்திருப்பதால் அதையும் ஒதுக்க முடியாது என்றும் ஷிண்டே அணிக்கு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடாவும் மதம் சார்ந்ததாகும் என்று கூறி, அதையும் தேர்தல் ஆணையம் ஷிண்டேவுக்கு ஒதுக்கவில்லை. புதிய  3 சின்னங்களை பரிந்துரை செய்யுமாறு கோரியுள்ளது.

அதேநேரம், உத்தவ் தாக்கரே அளித்த விருப்பப் பட்டியலில் மூன்றாவதாக இருந்த எரியும் தீப்பந்தம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. உத்தவ் தாக்கரே அணியும் உதய சூரியன் சின்னத்தையும் திரிசூலம் சின்னத்தையும் விருப்பப் பட்டியலில் சேர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.