இந்தியாவிலேயே அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் முன் மாதிரியாக இருக்க கூடிய
கட்சி திராவிட கட்சி என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இரண்டாவது முறையாக திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள திமுக தலைவரும் மற்றும் முதலமைச்சருமான ஸ்டாலினை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது அமைச்சர் செந்தில் பாலாஜி, கீதா ஜீவன், ஐ. பெரியசாமி மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உடன் இருந்தனர்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது:
ஜனநாயகம் என்பது ஒரு நாட்டின் தலையெழுத்தை தீர்மானிப்பதாகும். இந்தியாவிலேயே
அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் முன் மாதிரியாக இருக்க கூடிய கட்சி திராவிட
கட்சி. திராவிட இயக்க கட்சி போல் தேர்தல் நடத்திய கட்சி எந்த கட்சியும் கிடையாது.
நேற்று நடைபெற்ற பொது குழுவில் முதலமைச்சர் உரையாற்றியது தலைசிறந்த
உரை என்றார் வைகோ.
முன்னதாக, முதல்வர் ஸ்டாலினை வாழ்த்தவும், பொதுச் செயலாளர் துரைமுருகன் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி என அனைவரையும் வாழ்த்தவும் நேரில் சென்றார் வைகோ.
வைகோ, முதல்வர் சந்திப்பிற்கு பிறகு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச்
சேர்ந்த திமுக பொதுக் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றது குறிப்பிடத்தக்கது.








