கொரோனா பரவல் காரணமாக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையை காணொலி வாயிலாக மேற்கொள்ள திமுக திட்டமிட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறும் நிலையில், அரசியல் கட்சிகள் இடப்பங்கீடு, தேர்தல் பரப்புரை உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கொரோனா தொற்று பரவல் காரணமாக, தேர்தல் பரப்புரைக்கு தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில், காணொலி வாயிலாக தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவும், பொதுக்கூட்டங்கள் நடத்தவும் திமுக தலைமை முடிவு செய்துள்ளது. அதன்படி, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பரப்புரை மற்றும் பொதுக்கூட்டங்களில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். திமுகவினரும், பொதுமக்கள் கூட்டங்களில் காணொலி வாயிலாக கலந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.
இதற்கிடையே, கூட்டணி கட்சிகளுடன் இடப்பங்கீட்டை இறுதி செய்து, முழுமையான வேட்பாளர் பட்டியலை இன்று மாலைக்குள் வெளியிட திமுக முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் 5 கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திமுக போட்டியிடும் இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டவுடன் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டுளளார்.







