திமுக உதயமாக அடித்தளமிட்ட பெரியார் – மணியம்மை திருமணம்

திராவிட இயக்க வரலாற்றில் திமுக எனும் அரசியல் கட்சி உதிப்பதற்கு காரணமாக இருந்த பெரியார் – மணியம்மை தம்பதியின் திருமணம் நடைபெற்ற நாள் இன்று… “எனக்கு அரசியல் வாரிசு யாரும் கிடையாது, எனது கொள்கைக்கும்…

திராவிட இயக்க வரலாற்றில் திமுக எனும் அரசியல் கட்சி உதிப்பதற்கு காரணமாக இருந்த பெரியார் – மணியம்மை தம்பதியின் திருமணம் நடைபெற்ற நாள் இன்று…

“எனக்கு அரசியல் வாரிசு யாரும் கிடையாது, எனது கொள்கைக்கும் கருத்துக்களுக்கும் தான் வாரிசு. வாரிசு என்பது தானாக ஏற்பட வேண்டும்” இது பெரியாரின் வார்த்தைகள். இதனை மெய்ப்பிக்கும் வகையில் பின்னாளில் பெரியார் – மணியம்மை திருமணம் நடைபெற்று, பல்வேறு விமர்சனங்களுக்கும் மூலக்காரணமாக அமைந்தது.

1933-ம் ஆண்டு பெரியாரின் மனைவி நாகம்மையார் மறைந்த துயரம் மனதில் இருந்த போதும், பொது வாழ்க்கைக்கு இனி குடும்ப பந்தம் இடையூறாக இருக்காது எனக் கூறி, புறப்பட்டவர் தந்தை பெரியார். ஆனால், அவரை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தி, அவரது உறவினர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் மறுமணத்திற்கு சம்மதிக்கவில்லை பெரியார்…

இந்த நிலையில் தான், நாகம்மையாரின் மறைவுக்கு பிறகு, 1943ம் ஆண்டு பெரியாரின் இயக்கத்தில் இணைந்தார் மணியம்மை. தந்தை பெரியாருக்கு செவிலித் தாயாக, இயக்க புத்தக மூட்டைகளை சுமந்த விற்பனையாளராக, பெரியாரின் செயலாளராக, நற்பணியாளராக, இப்படி இயக்கத்துக்காகவும் பெரியாருக்காகவும் தன் வாழ்வின் அத்தனை இன்னல்களையும் கடந்து, வாழ்க்கையை கடத்திக் கொண்டிருந்தார்.

தனக்கு பிறகு கழகத்தின் சொத்துக்களுக்கு ஒரு வாரிசு வேண்டும் என்கிற எண்ணம் பெரியாரை வாட்டி வதைத்தது. அப்படி மணியம்மையை வாரிசு ஆக்கவே, 1949ல் அவரை திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கு வந்தார் பெரியார். திருமண ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, பெரியாருக்கும் மணியம்மைக்கும் இடையில் 40 வயது வித்தியாசம் இருந்தது.

1949 ஜூலை 10ம் தேதி திராவிடர் கழக நிர்வாகக் குழு கூடி, பெரியார் – மணியம்மை திருமண ஏற்பாடு வேண்டாமென்று தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் அதற்கு முந்தைய நாளே திருமணத்தை நடத்தி முடித்திருந்தார் பெரியார். எதிர்ப்பு, ஏளனம், கிண்டல், கேலி, வசவுகள், பழிதூற்றல் இயக்கப்பிளவு அனைத்தையும் தாண்டி, 1949 ஜுலை 9-ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு, சென்னை ஜில்லா திருமண பதிவாளர் முன்பு, சட்டப்படி திருமணம் நடைபெற்றது.

மணியம்மையை பொறுத்த வரை, பெரியாரின் கருத்து என்னவோ அதுதான் அவரது கருத்தும். பெரியார் – மணியம்மை எனும் திருமண ஏற்பாடு ஓர் இயக்க பாதுகாப்பு ஏற்பாடு தான், என விடுதலை நாளேட்டிலும், குடியரசு வார இதழிலும் கட்டுரைகள் வெளியானது. திருமணம் என்பது சட்டப்படியான பெயரே ஒழிய, காரியப்படி மணியம்மை தனக்கு வாரிசு என அறிவித்தார் பெரியார்…

பெரியார் – அண்ணா இடையே அவ்வபோது கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இந்த திருமணம் ஏற்படுத்தியது தான் திமுக என்ற கட்சி உருவாகவே அட்சாரமாக அமைந்தது. இந்த திருமணம் எங்களை இழிவுபடுத்துகிறது. எங்கள் கொள்கையை பழிக்கிறது. இயக்கத்துக்கு துடைக்க முடியாத பழியை தருகிறது என, கடுமையாக விமர்சித்த அண்ணா, வெட்கப்படுகிறோம் அயலாரைக் காண, வேதனைப்படுகிறோம் தனிமையில், எனும் தலைப்பில் நீண்ட நெடிய கடிதம் எழுதினார்.

“பெரியார் திருமணம், பொருந்தாக் கல்யாணமல்ல, பொருந்தும் கல்யாணம் என்பதே என் எண்ணம்” என பெரியாரின் உற்ற தோழரான பகுத்தறிவுக் களஞ்சியம் கைவல்யம் விளக்கம் அளித்தார். இப்படி ஆதரவும் எதிர்ப்புமாக சர்ச்சையுடன் நடைபெற்று முடிந்த இந்த திருமணம், அரை நூற்றாண்டுகளை கடந்தும் இன்றும் பேசுபொருளாக இருந்து வருகிறது.

 

கட்டுரையாளார்; விக்னேஷ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.