முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

திரையுலக மரபுகளை தகர்த்த புரட்சிப் படைப்பாளி


கிருத்திகா

கட்டுரையாளர்

ஆண்கள் கோலோச்சிய திரை மரபுகளை உடைத்து, பெண்களை புரட்சியாளர்களாக காட்சிப்படுத்திய இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் பிறந்தநாள் இன்று.

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில், 1930ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி பிறந்த பாலசந்தர், கணக்காளராக தன் பணியை தொடங்கினார். முதன்முதலில் எம்ஜிஆரின் தெய்வத்தாய் படத்திற்கு வசனம் எழுத தொடங்கியவர், அதனைத் தொடர்ந்தே இயக்குனரானார்.

1960களில், பெரும்பாலும் படங்களின் டைட்டில், அதில் நடிக்கும் நடிகரின் கதாபாத்திரத்தை குறிக்கும் வகையிலேயே அமைக்கப்பட்டன. இந்த மரபை உடைத்தெறிந்து, நீரில் உருவாகி சில நொடிகளில் உடைந்துபோகும் நீர்குமிழியை, தன் முதல் படத்தின் தலைப்பாக்கி கவனம் ஈர்த்தார் கே.பாலச்சந்தர்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, முத்துராமன், சிவகுமார், ஜெய்சங்கர் என நட்சத்திர நடிகர்கள் உலா வந்து கொண்டிருக்க, அதுவரை, நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்துவந்த நாகேஷை, நீர் குமிழியின் நாயகனாக்கி அழகு பார்த்தவர் கே.பி. எதிர்நீச்சல், பாமா விஜயம், இரு கோடுகள், சொல்லத்தான் நினைக்கிறேன் என அடுத்தடுத்து வித்தியாசமான பல்வேறு கதை களங்களை தேர்ந்தெடுத்து இயக்கினார்.

திரைப்படங்களில் நடிகர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய காலத்தில், நடிகர்களின் மனைவியாகவும், காதலியாகவும், திறன் அற்றவர்களாகவும் காட்டப்பட்ட நாயகிகளை, புரட்சிப் பெண்களாக காட்டியவர் கே.பாலச்சந்தர் தான்.. இன்று முன்னணி நடிகைகள் பலர் ஆர்வம் காட்டும் ஹீரோயின் ஓரியண்டட் கதைகளுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் இயக்குநர் சிகரம் தான். தொடர்ந்து சிந்து பைரவி, தண்ணீர் தண்ணீர், மனதில் உறுதி வேண்டும், கல்யாண அகதிகள் என பெண்களுக்கான கதைகளை தெரிவு செய்து சிறப்பாக இயக்கினார் கே.பி.

இன்று வரை, தமிழ் திரையுலகின் அசைக்க முடியா விருட்சமான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் வளர்ச்சிக்கு விதையிட்டது மட்டுமின்றி, வாய்ப்பு தந்து அழகு பார்த்தவர்.. இந்தியில் இவர் எடுத்த ஏக் து ஜே கேலியே, மொழி புரியா காதலர்களின் விருப்ப காவியமாக இருப்பதற்கு இவரது திரைக்கதை யுக்தியே காரணம்.

1980கள் வரை, வெள்ளித்திரையில் வேரூன்றிய கே. பாலசந்தர், 1990-களுக்கு பின்னர், சின்னத்திரையில் தனி முத்திரை பதித்தார். ரயில் சிநேகம், கையளவு மனசு என வித்தியாசமான கதைக்களம் கொண்ட தொடர்களை இயக்கினார். கல்கி, பொய், ரெட்டைச்சுழி, நினைத்தது யாரோ, உத்தம வில்லன் போன்ற படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தவும் செய்தார் கே.பி.

சினிமா உலகில் இவரது சேவையை பாராட்டி பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது மத்திய அரசு. பல விருதுகளை பெற்று சாதனை படைத்த கே.பாலச்சந்தர், கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். காலத்தால் அழியாத பல காவியங்களை படைத்த கே.பாலசந்தர் மறைந்தாலும், அவர் உருவாக்கிய கதாபாத்திரங்கள் மூலம் தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டிருப்பார் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.

Advertisement:
SHARE

Related posts

“டாஸ்மாக் திறப்பினால் கொரோனா பரவல் அதிகரிக்காது” – எம்.பி. திருநாவுக்கரசர்

Gayathri Venkatesan

காங்கிரஸ் கட்சிக்கு தன்மானம், சுய கெளரவம் முக்கியம்: கே.எஸ்.அழகிரி

Niruban Chakkaaravarthi

நீர்நிலைகள் பாதுகாப்பு; 2 வாரங்களில் அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவு

Saravana Kumar