ஹாக்கி என்றாலே தென் மாவட்டங்கள்தான் என்று இருந்த காலம்போய் இன்று ஹாக்கி விளையாட வீரர்களிடையே ஆர்வம் குறைந்து வருகிறது. இதனை மாற்றி அமைத்து அவர்கள் சாதனை புரிய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் திமுகவின் மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி கருணாநிதி. இவருக்கு ஏன் இந்த ஆர்வம் ? வாங்க பார்க்கலாம்.
தேசிய அளவில் நடைபெற்ற ஹாக்கி போட்டியில் 22 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அணி இறுதி சுற்றுக்கு சென்றது. இதில் தேசிய அளவில் அந்த அணி இரண்டாமிடம் பிடித்தது. இந்தளவிற்கு தமிழக ஹாக்கி அணி மக்களை தம் பக்கம் திரும்பி பார்க்க வைத்ததில் கனிமொழியின் பங்கும் முக்கியமானது என்கிறார் திமுக பிரமுகரும், ஹாக்கி ஆர்வலருமான அம்மு அன்டோ.
அப்படி என்னதான் கனிமொழி ஹாக்கிக்கு செய்துவிட்டார் என்ற கேள்வி எழ, அதற்கு பதில் அளித்த அவர், ஹாக்கி போட்டிக்கு என செயற்கை புல்வெளி மைதானம் சென்னையில் உள்ள ஜவஹர்லால் மைதானத்திலும், ராதாகிருஷ்ணன் மைதானத்தில் மட்டுமே உள்ளது. அதுபோன்ற ஒரு செயற்கை புல்வெளி மைதானத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் அமைக்க ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியாவில் போராடி பெற்றுக்கொடுத்தார் என்றார்.
மேலும், போட்டியில் கலந்து கொண்ட ஹாக்கி வீரர்களை ஊக்குவிக்கும் விதமான அவர்களுக்கு தேவையான காலணிகளை அவர் நேரில் சென்று வாங்கி கொடுத்து உற்சாகப்படுத்தினார். அவர்களை உணவகங்களுக்கு அழைத்துச் சென்று விருந்து கொடுத்தார். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் என்கிறார் அம்மு அன்டோ.
அதுமட்டுமின்றி, கடந்த இரண்டு ஆண்டுகளாக தேசிய அளவிலான ஜூனியர் ஹாக்கி போட்டிக்கான ஒருங்கிணைப்பாளராகவும் கனிமொழி உள்ளார். எனவே தமிழக அரசு மூலம் வீரர்களுக்கு தேவையான உதவிகளை அதிகளவில் செய்து வருகிறார் என ஹாக்கி வீரர்கள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.
சிறப்பாக விளையாடும் வீரர்களை ஊக்குவித்து அவர்கள் தேசிய கலந்து கொள்வதற்கான சிறப்பு பயிற்சிகளையும் அளிக்க பயிற்சியாளர்களை நியமிக்க கனிமொழி முயற்சி எடுத்து வருகிறாராம்.
திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு நலத்துறை அமைச்சராக நியமிக்கப்படுவார் என கூறப்பட்டு வரும் சூழ்நிலையில், கனிமொழியும் விளையாட்டு பக்கம் தமது ஆர்வத்தை திருப்பி உள்ளாரா ? என அவரது ஆதரவாளர்களிடம் கேட்டபோது, ‘நீங்கள் கூறும் கருத்து கடந்த சில வாரங்களாகதான் ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது. கனிமொழியோ கடந்த 2019ஆம் ஆண்டு முதலே ஹாக்கி வீரர்களை ஊக்குவித்து வருகிறார். அதற்கு காரணம், ஒரு காலத்தில் தேசிய அளவில் ஹாக்கி போட்டிகளில் கொடி கடந்த தென் மாவட்ட வீரர்களின் எண்ணிக்கை இன்று காணாமல் போய்விட்டது. அதனை மீட்கவே இந்த முயற்சி என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
இராமானுஜம்.கி









