தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்று காவல்துறை – தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்ந்த மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலளித்தார். இந்தப் பதிலுரையில் சர்க்காரியா கமிஷன், பார்டி ஃபண்ட் குறித்த அமலாக்கத்துறையின் அறிக்கை உள்ளிட்டவற்றைச் சுட்டிக்காட்டி திமுக மீது ஆவேசமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இந்த நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று சட்டப்பேரவை கூடியதும் எதிர்க்கட்சியான திமுகவின் கொறடா எ.வ.வேலு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “சர்க்காரியா கமிஷன், அமலாக்கத்துறை வழக்கு மற்றும் மிசா குறித்து முதலமைச்சர் விஜய் ஆதாரம் இல்லாமல் பேசுகிறார். எனவே, அவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்” என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “முன்னாள் முதல்வர் கருணாநிதி எங்கெல்லாம் பணம் வாங்கியது என்பது சர்க்காரியா கமிஷனில் இருக்கு. மிசா காலங்களில் திருட்டு, வழிப்பறி, பெண்கள் குறித்த வழக்குகளிலும் கைது செய்யலாம்; ஆனால், எல்லாமே மிசாவால் கைது செய்ததாகக் கருத முடியாது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பற்றி அவதூறாகப் பேசியது என இப்படி பல விஷயங்களைப் பேசியதன் அடிப்படையில்தான் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்; மிசாவால் அவர் கைது செய்யப்பட்டார் என எந்தக் குறிப்பும் இல்லை” என்று தெரிவித்தார்.
அடுத்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுணா, “திமுக ஆட்சியில் செய்த ஊழல்களை ஒவ்வொரு துறையிலும் முதலமைச்சர் கிளீன் பண்ணிக்கொண்டு இருக்கிறார்; ஊழல் என்ற புற்றுநோயை திமுகதான் உருவாக்கியது என்ற வரலாற்றை முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்” என்றார்.
இதனையடுத்து பேசிய சபாநாயகர், “முதலமைச்சர் விஜய் சில ஆதாரங்களை முன்கூட்டியே காட்டினார்; இந்த அவையிலேயே சர்க்காரியா கமிஷன் பற்றி விரிவான விவாதம் நடத்தப்பட்டுள்ளது; ஏற்கெனவே சொல்லப்பட்ட செய்தியைத்தான் வாசித்தார். புதிதாக எந்த செய்தியையும் சொல்லவில்லை; மிசாவால் முன்னாள் முதலமைச்சர் கைது செய்யப்பட்டது உண்மை; அதைப் பற்றிதான் பேசினார். முரசொலி மாறன் பற்றி இங்கே குறிப்பில் உள்ள செய்தியைத்தான் பேசினார். அதேபோல், அமலாக்கத்துறை என்ன சொல்லியது என்பதைத்தான் பேசியிருக்கிறார். அதனால், அவைக் குறிப்பிலிருந்து நீக்க தேவை இல்லை” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதனையடுத்து, முதலமைச்சர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி திமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை சபாநாயகர் பலமுறை எச்சரித்தார். இருப்பினும், திமுகவினர் அமளி மற்றும் தர்ணாவில் ஈடுபட்டதால், திமுகவினரை வெளியேற்றும்படி சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, அவைக்காவலர்கள் திமுக எம்.எல்.ஏ.க்களை குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.




