தமிழக சட்டப்பேரவையில் தமிழ்நாட்டில் டெங்கு நோய் தடுக்க புதிய முன்னெடுப்பு பற்றி சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் பேசினார். அப்போது, தமிழ்நாட்டில் ஒவ்வொரு அரசும் டெங்கு நோய் தடுப்பு மற்றும் அதற்கான சிகிச்சை குறித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், டெங்கு காய்ச்சல் தொடர்ந்து ஒரு முக்கியமான பொது சுகாதாரப் பிரச்சினையாக இருந்து வருகிறது. கடந்த 2025 ஆம் ஆண்டு தமிழகத்தில் 25,580 நபர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 12 உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.
இந்த ஆண்டு தற்போது வரை 14,581 நபர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 9 உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் டெங்கு நோய் பரவாமல் தடுக்க புதிய வழிவகைகளை கண்டறிய முதல்முறையாக அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ள தமிழக சுகாதாரத்துறை முன்னெடுத்துள்ளது. டெங்கு நோய் பாதிப்பு அதிகம் உள்ள ஒரு மாவட்டத்தில் சில வார்டுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட இருக்கிறது.
இந்த ஆய்வில், உடலில் தடவும் கொசு விரட்டி (Topical Mosquito Repellent), lemon eucalyptus oil போன்ற இயற்கை கொசு விரட்டி மற்றும் மின்சார கொசு விரட்டி (Vapourizer) ஆகியவற்றின் மூலம் டெங்கு நோய் பரப்பும் Aedes கொசுக்கடியிலிருந்து கூடுதல் பாதுகாப்பு பெற முடியுமா மற்றும் இதனால் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படுமா என்பது பற்றி கள ஆய்வு மேற்கொள்
தனிப்பட்ட முறையில் உடலில் தடவும் கொசு விரட்டிகளால் கொசுக்கடி தடுக்கப்படுகிறது என்றாலும் சமூக அளவில் இதை பயன்படுத்துவதன் மூலம் டெங்கு நோய் பரவலை குறைக்க முடியுமா என்பது பற்றி இதுவரை கள ஆய்வுகளோ, தரவுகளோ இல்லை. இதனை கருத்தில் கொண்டு, தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் மூன்று Cluster Randomized Controlled Studies (குழும சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வுகள்) மேற்கொள்ள அரசு முடிவு எடுத்துள்ளது.
வழக்கமான அரசு கொசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன் இணைந்து இத்தலையீடுகளைப் பயன்படுத்தும்போது, நோய் பரவலில் அளவிடக்கூடிய குறைவு ஏற்படுகிறதா என்பது மதிப்பீடு செய்யப்படும்.
முன்முயற்சி 1–சிறந்த கொசு விரட்டியைக் கண்டறிதல், முன்முயற்சி 2–கொசு வலை மற்றும் உடலில் தடவும் கொசு விரட்டியின் கூட்டு பயனை மதிப்பீடு செய்தல், முன்முயற்சி 3–வீட்டு மட்டத்திலான கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மதிப்பீடு செய்தல், ஒவ்வொரு ஆய்விலும் 48 குழுமங்கள் (clusters) அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழுமத்திலும் 20 வீடுகள் இடம்பெறும். இதன் மூலம் மூன்று ஆய்வுகளிலும் சேர்த்து சுமார் 2,880 வீடுகள் இந்த ஆய்வில் பங்கேற்கும்.
இந்த ஆய்வில் பயன்படுத்தப்படும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியான பயன்பாடு (Adherence), பொதுமக்களின் ஏற்றுக்கொள்ளும் தன்மை (Acceptability), நடைமுறைப்படுத்தும் சாத்தியக்கூறு (Feasibility) மற்றும் செலவு (Cost) ஆகியவையும் மதிப்பீடு செய்யப்படும். இந்த தலையீடுகள் தற்போதுள்ள அரசு கொசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு மாற்றாக அல்ல அவற்றிற்கு துணையாகவும் கூடுதலாகவும் செயல்படுத்தப்பட உள்ளன.
மொத்தம் சுமார் 43 லட்சம் மதிப்பீட்டுச் செலவில் மேற்கொள்ளப்படவுள்ள இவ்வாய்வுகள் மூலம், நடைமுறைக்கு ஏற்ற, பொதுமக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் செலவு குறைந்த வீட்டு மட்ட கொசு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவியல் ஆதாரங்கள் உருவாக்கப்படும். டெங்குவைத் தடுப்பதில் பொதுமக்களின் ஒத்துழைப்பும் மிக முக்கியம். வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வோம் கொசு பெருக்கத்தை தடுப்போம் டெங்குவை ஒழிப்போம் என்றார்.




