“கடந்த ஆட்சியில் பொதுப்பணித்துறையில் ரூ.2000 கோடி ஊழல்” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பனித்துறையில் ரூ.2000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. பட்ஜெட் தொடரின் இறுதி நாளான இன்று சட்டப்பேரவை கூடியதும், முதலமைச்சர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக் கோரி திமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால், சபாநாயகரின் உத்தரவுப்படி திமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

இதனையடுத்து, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவை உரிமை மீறல் பிரச்னையை கொண்டு வந்தார். இதுகுறித்து அவர் பேசியதாவது:

“நமக்கெல்லாம் வழிகாட்டி அண்ணா, ‘கடமை, கட்டுப்பாடு, கண்ணியம்’ என்று கூறியது போல், உங்களின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு, சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு மிகுந்த தவறு செய்தால்கூட, நீங்கள் சுட்டிக்காட்டினால் உங்கள் வழியில் நாங்கள் ஏற்றுக்கொண்டு, அமைதிக்காகக் கூடிய கண்ணியமான அவையில் முதலமைச்சர் வழியில் பின்பற்றுவோம் என்று உறுதியளிக்கிறேன்.

காலையில் உங்கள் கவனத்திற்கு சட்டப்பேரவையின் உரிமை மீறல் பிரச்னையை நாங்கள் கொண்டு வந்தோம். தமிழ்நாடு சட்டப்பேரவை விதியின் 219-இன் கீழ், முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறையில் அமைச்சராக இருந்தபொழுது, 2026-27 ஆம் ஆண்டிற்கான 9 பணிகளுக்கு ரூபாய் 2,000 கோடி முன்கூட்டியே நிர்வாக அனுமதி பெறாமல் பெற்றிருக்கிறார். இதனை அவை உரிமை மீறல் பிரச்னையாகக் கொண்டு வர வேண்டும்” என்றார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர், “இதுகுறித்து ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.