மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித்தேர்தல் குறித்து ஆலோசிக்க தவெகவினர் அழைப்பு விடுத்தனர். புதிய கூட்டணியை உருவாக்க வேண்டுமென தவெக தரப்பில் கூறப்பட்டது. நாளை நடக்க உள்ள தவெக ஆதரவு கட்சிகள் கூட்டத்தில் சிபிஎம் பங்கேற்காது. மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்குவோம்” என்றார்.
மேலும், சட்டப்பேர்வையில் முதலமைச்சர் விஜய் காவல்துறை மாணியக்கோரிக்கை பதிலுரையில் சம்பந்தமில்லாமல் பேசியுள்ளார். எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விக்கு பதில் கூறவில்லை. சட்டமன்றம் சண்டை மன்றமாக மாறியுள்ளது. மரபுகளுக்கு உட்பட்டு சட்டமன்றம் நடக்க வேண்டும். சட்டமன்ற நேரத்தை வீணடிக்காமல் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தவெக அமைச்சர்களுக்கு பணிவாக ஒன்று சொல்லிக்கிறேன், தயவு செய்து முதலில் படியுங்கள். இதுதான் நான் உங்களுக்கு சொல்லும் அட்வைஸ். மிசாவில் கைது செய்யப்பட்டவர்கள் எல்லோரும் சமூக விரோதிகள் என்று அமைச்சர் நிர்மல்குமார் சொல்லியிருப்பது சிறுபிள்ளைத்தனமானது. வரலாறு தெரியாமல் சகட்டுமேனிக்கு அமைச்சர்கள் சேற்றை வாரி வீசுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என்றார்.
மேலும்,. தவெக அரசுக்கு ஆதரவு தொடருமா என்ற கேள்விக்கு, “ தவெகவுக்கு வெளியில் இருந்து தங்களது ஆதரவு தொடரும். தவெக அரசுக்கு 5 ஆண்டுகள் ஆதரவு கொடுப்போம் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. தவெகவின் நிலைப்பாட்டை பொறுத்து அவர்களுக்கு ஆதரவளிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்” என்று பதிலளித்தார்.




