திமுக தான் பயணித்துக் கொண்டிருக்கும் பாதையில் இருந்து மாறியதாகத் தெரியவில்லை என்றும், இன்னும் தவறான பாதையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறது என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தனியார் நிறுவனம் சார்பில் பான் இந்தியா அரசியலமைப்பு விழிப்புணர்வு பேரணியை வெற்றிகரமாக நிறைவு செய்தததை முன்னிட்டு, அதன் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேவநாதன் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, “16 நாட்கள் பயணமாக இங்கிருந்து, 6000 கிலோ மீட்டர் தூரம் சென்று, 9 மாநிலங்களில் கால்பதித்து வந்துள்ளனர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை, இந்தியா முழுவதும் கொண்டு சென்றுள்ளனர். இந்தியாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளில், அரசியல் அமைப்புச் சட்டம் குறித்து வகுப்புகள் இருக்கிறதா?
நம் நாட்டில் அரசியல் அமைப்பு சட்டம் பற்றி என்ன தெரியும் என்று கேட்டால், அதற்கு தெரியாது என்றே பலர் பதில் சொல்வார்கள். நரேந்திர மோடி, இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்ற உடன், நவம்பர் 26ஆம் தேதியை அரசியலமைப்பு சட்ட நாளாக அறிவித்தார். 1949ஆம் ஆண்டு கொடுக்கப்பட்டு, 1950ஆம் ஆண்டு அரசியல் சாசனமாக, அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. நவம்பர் 26ஆம் தேதியை அரசியலமைப்பு சட்ட நாளாக அறிவிக்க இதுவரை இந்தியாவில் பிரதமராக இருந்தவர்கள், ஒரு நாள் கூட யோசித்ததில்லை.
இந்திய மக்களுக்கு சுயமாக நிர்வாகம் செய்ய தெரியாது. விரைவில், இந்தியா துண்டு துண்டாக போய்விடும் என்று அப்போதைய பிரிட்டன் அதிபர் வின்ஸ்டன் சர்ச்சில் கூறினார். ஆனால் இன்று அதே பிரிட்டன் நாட்டிற்கு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராகும் நிலை வந்துள்ளது” என்று பேசினார்.
நிகழ்ச்சி முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில், வெறும் பெயருக்காக இருக்கும் அரசியல் கட்சிகள் தேசவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவ வீரரின் குடும்பத்தினரை மிரட்டி வருகின்றனர். அந்த ராணுவ வீரரிடம், எந்த பிரச்னையாக இருந்தாலும் என்னை தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கு உதவி செய்ய பாஜக கடமைப்பட்டிருக்கிறது. பாஜக உங்களுக்கு துணையாக இருக்கும் என்று அவருக்கு தைரியம் கொடுத்துள்ளேன். தினகரன், முரசொலி போன்ற பத்திரிக்கைகளுக்கும், ஆர்.எஸ்.பாரதி போன்றோருக்கும் பதிலளித்து என்னுடைய தரத்தை தாழ்த்த விரும்பவில்லை.
சுற்றுப்பயணம் குறித்த திட்டமிடுதலை ஆரம்பித்திருக்கிறோம். அனைத்து மக்களையும் சந்திக்க வேண்டும். மத்திய அரசின் நலத்திட்டங்கள் எந்த அளவு கிராமங்களைச் சென்றடைந்துள்ளது. ஏதேனும் குறைகள் இருந்தால் அதனை சரி செய்து கொடுக்க வேண்டும். இது போன்ற நோக்கங்களை முன்னிறுத்தி மேற்கொள்ள இருக்கும் சுற்றுப்பயணம் குறித்து விரைவில் அறிவிப்போம்.
திமுக அரசு மீதான மக்களின் வெறுப்பு வெட்ட வெளிச்சமாக வெளியே தெரிகிறது. திமுக மாறியதாகத் தெரியவில்லை. இன்னும் தவறான பாதையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் பால் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டது. பாஜகவின் வலிமை அனைத்து தொகுதிகளிலும் வளர்ந்திருப்பதை அந்த போராட்டங்கள் வெளிக்காட்டின. அடுத்து நடத்தப்போகும் போராட்டம் 5000 இடங்களில் இருக்க வேண்டும் என கட்சியினரிடம் கூறியுள்ளோம்” என்றார்.