திமுக நடத்துவது குடும்ப அரசியல் தான் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில்…

திமுக நடத்துவது குடும்ப அரசியல்தான் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் காட்டமாக பதிலளித்துள்ளார். தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் கும்மிடிப்பூண்டி கி.வேணு இல்லத் திருமணம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று…

திமுக நடத்துவது குடும்ப அரசியல்தான் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் காட்டமாக பதிலளித்துள்ளார்.

தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் கும்மிடிப்பூண்டி கி.வேணு இல்லத் திருமணம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று காலை நடைபெற்றது. தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி மணமக்கள் செ.அஸ்வினி-க.பிரவீன் குமார் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

அப்போது உரையாற்றிய அவர், அமைச்சர் காந்தி ஒரு வேண்டுகோள் வைத்தார். அவருக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் சொல்ல வேண்டி உள்ளது. இன்றைக்கு நல்லதைகூட ஜாக்கிரதையாக ஒருமுறைக்கு பலமுறை யோசித்து தான் செய்ய வேண்டி உள்ளது. எதிர்க்கட்சியாக இருந்த போது கூட உடனுக்குடன் எதையும் செய்து விட முடியும். ஆனால் இப்போது நாம் ஆட்சியில் இருப்பதால் ஒவ்வொன்றையும் யோசித்து செய்ய வேண்டி உள்ளது.

பிரதமராக இருக்க கூடிய மோடி 2 நாட்களுக்கு முன்பு தி.மு.க. பற்றி ஒரு உரையாற்றி இருக்கிறார். அதில் தி.மு.க. குடும்ப அரசியலை நடத்துகிறது. தி.மு.க. வெற்றி பெற்றால் அவர்களது குடும்பம்தான் வளர்ச்சி அடையும் என்று பேசி இருக்கிறார். ஆமாம் தி.மு.க. ஒரு குடும்பம் தான். அப்படி சொன்னதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஆனால் அவர் அதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. தி.மு.க. குடும்பம் குடும்பமாக அரசியல் நடத்தி வளர்ச்சி அடைந்து வருவதாக பேசி உள்ளார்.

நாட்டின் பிரதமராக இருக்கும் மோடிக்கு வரலாறு தெரியவில்லை. பேரறிஞர் அண்ணா கட்சி தொடங்கிய போது தம்பி தம்பி என்று தொண்டர்களை அழைப்பார். கலைஞர் பேசும் போது அனைவரையும் உடன்பிறப்பே என்று அழைத்தார். அது அண்ணனாக இருந்தாலும் தம்பியாக இருந்தாலும் அக்காவாக இருந்தாலும் தங்கையாக இருந்தாலும் அத்தனை பேரையும் உடன்பிறப்பே என்றுதான் அழைப்பார். ஆக இது உள்ளபடியே குடும்ப அரசியல்தான். கட்சியினரை தம்பி என அழைத்தவர் அண்ணா.

பிரதமர் மோடி பொருத்தமாகத் தான் பேசியிருக்கிறார் . பல போராட்டங்களில் திமுகவினர் குடும்பம், குடும்பமாக பங்கேற்று சிறைக்கு சென்றிருப்பதாக கூறிய ஸ்டாலின், திமுகவுக்கு தமிழர்களும் தமிழ்நாடும் தான் குடும்பம் என்றும் தெரிவித்தார்.

மேலும் பாஜக ஆளும் மணிப்பூர் மாநிலம் கலவரத்தால் எரிந்து கொண்டிருந்தாலும் பிரதமர் மோடி அந்த பக்கமே போகவில்லை என்றும் சாடினார். சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கவும் மதக் கலவரங்களை ஏற்படுத்தவுமே பொது சிவில் சட்டம் கொண்டு வர மத்திய அரசு முயற்சிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். பாட்னாவில் எதிர்க்கட்சிகள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தால் பிரதமர் மோடிக்கு அச்சம் ஏற்பட்டிருப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்தார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.