மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “ முதலமைச்சர் விஜய்க்கு எதிராக, ஆண்ட கட்சிகள் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறது. நேர்மையான ஆட்சி நடத்த வேண்டும் என்பதை இலக்காக கொண்டு முதலமைச்சர் விஜய் செயல்படுகிறார். நிர்வாக அனுபவம் மற்றும் அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லையென்றாலும் அவர் நல்லாட்சி செய்கிறார். முதல்வர் விஜய் நேர்மையான ஆட்சி நடத்துகிறார் என்பதற்கான சான்று அவருக்கு பல் முனைகளிலிருந்து தாக்குதல்கள் நடைபெறுவதுதான்.
அரசு அலுவலகங்களில் முந்தைய ஆட்சிகளில் நடைபெற்றது போல தவெக ஆட்சியில் கப்பம் கட்டும் வேலைகளை முதல்வர் நீக்கி விட்டார். முந்தைய ஆட்சிகளில் ஜெயராஜ் – பென்னிக்ஸ் கொலைகள் நடைபெற்றது போல கொடூரமான கொலைகள் தவெக ஆட்சியில் நடைபெறவில்லை.
SIR கணக்கெடுப்பில் வாக்காளர் பெயர்களை சேர்த்ததற்கும், நீக்கியதற்கும் காரணம் திமுக மட்டுமே. தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு திமுக மட்டுமே முழு பொறுப்பு. SIR கணக்கெடுப்பில் திமுக குழப்பங்கள் செய்யாமல் இருந்திருந்தால் முதல்வர் விஜய் இன்னும் 30, 40 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பார். இந்தியா முழுவதும் SIR-க்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுவதால் திமுக குரல் கொடுக்கிறது. SIR விவகாரத்தில் இப்போது திமுக போராடுவது என்பது – திருடன் திருடிவிட்டு கூட்டத்தோடு சேர்ந்து திருடன், திருடன் என கத்துவது போலத்தான்.
தவெக கூட்டணிக்குள் எது தவறோ அதை சுட்டிக் காட்டுகிறோம். குறிப்பாக பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். செஞ்சியில் காணாமல் போன சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் போனதற்கு காவல்துறையும், தவெக அரசும் என்ன செய்ய முடியும்? பாலியல் வன்கொடுமை கொலைகள் எல்லா ஆட்சிகளிலும் நடைபெறுகிறது” என்று அவர் கூறினார்.




