இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் துணிச்சலுடன் போராடிய மாவீரர்கள் மருது சகோதரர்கள். நாட்டின் விடுதலைக்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்த இவர்களின் வீரமும் தியாகமும் தமிழர்களின் வரலாற்றில் என்றும் அழியாத இடத்தைப் பெற்றுள்ளன. இன்று அவர்களின் 225 வது நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. அவர்களின் நினைவைப் போற்றி தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தனது மரியாதையை செலுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“மருதுபாண்டிய மாமன்னர்களை போர்முனையில் சந்திக்க திராணியற்ற பரங்கியர் கூட்டம் சூழ்ச்சியால் மருதுபாண்டியர்களை கைது செய்தது. சரணடையா விட்டால் காளையார் கோவில் கோபுரம் தகர்க்கப்படும் என அறிவித்து, பீரங்கிகளை நிறுத்த, காளீஸ்வரர்மேல் கொண்ட பக்தியால் சரணடைய, மருதிருவரை 1801ம் ஆண்டு அக்டோபர் 24ம் நாள் திருப்புத்தூரிலே கூண்டிலே அடைத்து தூக்*லிட்டது. அவர்களுடன் ஐயாயிரம் பேர்வரை கொல்லப்பட, ஐநூறு பேர்கள் மட்டுமே கொல்லப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டது. திருச்சியில் தேச ஒற்றுமையை வலியுறுத்தி அவர்கள் செய்த ஜம்புத்தீவு பிரகடனம் வீரத்தின் உரைகல்! சிவகங்கைச்சீமையை ஆண்ட மருதிருவரின் ஆளுமையும் ஆண்மையும் வீரமும் துணிவும் என்றும் நினைவுகூரப்படும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.




