திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில், 437 நபர்களிடமிருந்து ஆயிரத்து 640 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களை கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில், பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 24 பேருக்கு பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கியதாக தெரிவித்தார். அர்ச்சகர், வேதபாராயணம், இசை உள்ளிட்ட பயிற்சி பள்ளிகளை அதிக அளவில் தொடங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், அர்ச்சகர் பயிற்சி பெறுவதற்கு வழங்ப்பட்டு வந்த ஊக்கத்தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் 437 நபர்களிடம் இருந்து 1,640 கோடி ரூபாய் அளவிற்கு கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளன. கோவில் நிலங்களை மீட்கும் வேட்டை தொடரும் என தெரிவித்தார். மேலும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குடமுழுக்கு செய்ய வேண்டிய கோவில்களைக் கண்டறிந்து குடமுழுக்கு பணிகள் நடைபெற்று வருகின்றது எனவும் திமுக தலைமையிலான இந்த அரசு ஆன்மீகத்திற்கு எதிரான அரசு அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் ஆன்மீகவாதிகளை அரவணைத்து செல்கிறது எனவும் கூறினார்.







