சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து; உரிமையாளர் மீது வழக்கு பதிவு

சிவகாசி அருகே, பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில், 4 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், பட்டாசு ஆலை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், களத்தூரில் வழிவிடு முருகன் என்பவருக்கு சொந்தமான…

சிவகாசி அருகே, பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில், 4 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், பட்டாசு ஆலை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், களத்தூரில் வழிவிடு முருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு நேற்று தொழிலாளர்கள் வழக்கம் போல பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென, பலத்த சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறின. இந்த சம்பவத்தில், ஆலையின் 6 அறைகள் இடிந்து தரைமட்டமாகின. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி, 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 8 வயது சிறுவன் உட்பட 8 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

விபத்துக்கான காரணம் குறித்து நத்தம்பட்டி காவல்நிலைய போலீசார் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, உரிய பாதுகாப்பின்றி ஆலையை இயக்கியதாக ஆலை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்த நத்தம்பட்டி காவல்துறையினர் தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளரை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் விதிமுறை மீறலில் ஈடுபட்டு விபத்து ஏற்படுத்தியதாக பட்டாசு ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து ஆட்சியர் மேகநாத ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.