”தென்பெண்ணையாற்றை திமுக பாழ்படுத்தி வருகிறது”- நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

தென் பெண்ணையாற்றை திமுக பாழ்படுத்தி வருகிறது எனத் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

”கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தொழிற்சாலைகளின் கழிவுநீரைத் தென்பெண்ணையாற்றில் கலந்து விடுவதால், தமிழ் கண்டதோர் தென்பெண்ணை இன்று துர்நாற்றத்துடன் நுரைப்பொங்கி கரை ஒதுங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கண்ணாடி கணக்காக தண்ணீர் தழும்ப வேண்டிய தமிழக ஆறுகளும் ஏரிகளும், திமுக அரசின் அலட்சியத்தால் கழிவுநீர் கால்வாய்களாக மாறிப்போனது மிகுந்த மன வேதனையளிக்கிறது.

இது ஒன்றும் முதல் முறை அல்ல. தென்பெண்ணையாற்றின் அவல நிலையை அரசின் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றும், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தலையிட்ட பிறகும், அதைக் கண்டுகொள்ளாமல் மக்களின் நீராதாரத்தையும் சுற்றுச்சூழலையும் ஒருசேர மாசுப்படுத்துவது தான் திராவிட மாடலா? இந்த நிலை இப்படியே தொடருமானால் நமது எதிர்காலத் தலைமுறையினரின் குடிநீர்த் தேவையைத் தீர்க்கக்கூட கண்ணுக்கெட்டிய தூரம் வரை தமிழகத்தில் நீர்நிலைகள் தென்படாது.

தென்பெண்ணை தொடங்கி தாமிரபரணி வரை அனைத்து நதிகளையும் மாசுபடுத்தி, நீர்வளத்தைக் குன்றச் செய்கிற இந்த  ஆட்சி தான் தமிழகத்தின் பொற்காலமா?”

என்று தெரிவித்துள்ளார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.